ஜனாதிபதி வேட்பாளரை விமர்சிப்பதா? பெண் பத்திரிகையாளர் மீது பாஜக புகார்
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை மோசமாக விமர்சித்ததாக குற்றம்சாட்டி, பெண் பத்திரிகையாளர் ரானா அய்யூப் மீது போலீசில் புகார் அளித்துள்ளது பாஜக.
ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாஜக. இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கோவிந்த் பற்றி கருத்து தெரிவித்த பிரபல பெண் பத்திரிகையாளர் ரானா அய்யூப், ’இவர்கள்தான் பிரதீபா பாட்டீலை மோசமான தேர்வு என்று கூறியவர்கள்’ என்று டிவீட் செய்தார்.
இதையடுத்து, பாஜகவின் செய்தித்தொடர்பாளரான நுபுர் ஷர்மா, குடியரசுத் தலைவர் வேட்பாளரை ‘வெறுப்பு நிறைந்த, தரக்குறைவான, சாதிய ரீதியான’ வார்த்தைகளால் விமர்சித்ததாகக் குறிப்பிட்டு, ரானா அய்யூப் மீது காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளதுடன், அதைத் தனது டிவிட்டர் தளத்திலும் பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ரானா, ’சாதிய ரீதியில் நான் விமர்சித்தேனா?’, ‘மழைக்கோட்டுடன் குளிக்கும் வித்தை மன்மோகன் சிங்குக்கு மட்டுமே தெரியும்’ என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். அதை, சீக்கிய சமூகத்திற்கு எதிரான பிரதமரின் வெறுப்பு என எடுத்துக்கொள்ளலாமா?’ என கேட்டிருக்கிறார்.
குஜராத்தில் நிகழ்ந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களைப் பற்றிய ’குஜராத் ஃபைல்ஸ்: அனாடமி ஆஃப் கவர் அப்’ என்னும் புலனாய்வு நூலை எழுதியவர் ரானா அய்யூப் என்பது குறிப்பிடத்தக்கது.