மேற்கு வங்க மழை சேதத்திற்கு காரணம் மத்திய அரசு தான் - மம்தா குற்றச்சாட்டு
மேற்குவங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மழையால் ஏற்பட்டதல்ல, மனிதர்களும் மத்திய அரசின் அலட்சியத்தாலும் விளைந்தது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்காள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 160 கிராமங்களில் சுமார் 20 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேற்குவங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மழையால் ஏற்பட்டதல்ல, மனிதர்களாலும் மத்திய அரசின் அலட்சியத்தாலும் விளைந்தது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஹைவுரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட மம்தா பானர்ஜி இதனை தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சீசனில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் இந்த வெள்ள பாதிப்பு மழையால் வந்தது அல்ல. ஆனால் இது மனிதர்களின் செயல்களால் விளைந்தது.
தாமோதர் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியாக தண்ணீரே வெள்ளப் பெருக்குக்கு காரணம். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் மத்திய அரசு தூர்வார வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை, இதுவே இந்த வெள்ளப்பிரச்சனைக்கு காரணம்" என அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் இந்த பருவ மழையால் மேற்கு வங்காளம் கடுமையாக பாதிக்கப்படைவதாக கூறிய அவர், 2012-ம் ஆண்டிலே இந்த விவகாரத்தை எழுப்பினேன். ஆனால் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை இந்த பிரச்சனை தீராது எனவும் மம்தா கூறினார்.