முந்தைய சாதனையை முறியடித்த பாஜக - குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?

முந்தைய சாதனையை முறியடித்த பாஜக - குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?
முந்தைய சாதனையை முறியடித்த பாஜக - குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?

குஜராத்தில் மாபெரும் வெற்றிபெற்றுள்ள பாஜக தனது முந்தைய சாதனையை முறியடித்து அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது குஜராத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்கள் மற்றும் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

பாஜகவின் சாம்ராஜ்யமாக திகழ்கிறது குஜராத். பிரதமர் நரேந்திர மோடியின் பிறப்பிடமான குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது பாஜக. நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்திருந்த நிலையில் தனது முந்தைய சாதனையை பாஜக முறியடித்திருக்கிறது. 182 தொகுதிகளைக்கொண்ட பெரிய மாநிலமான குஜராத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றிபெற்று, அங்கு பெரும்பான்மை கட்சியான பாஜக தனது ஆட்சியை தக்கவைத்தது.

2017ஆம் ஆண்டு வாக்கு எண்ணிக்கையின்போது பாஜகவிற்கு ஜெர்க் காட்டிய காங்கிரஸ், தற்போது குஜராத்தில் பொலிவிழந்திருக்கிறது. குடும்ப அரசியல், உட்கட்சி பூசல் மற்றும் தலைமை பிரச்னை போன்ற பலவும் காங்கிரஸின் பின்னடைவுக்கு காரணமாக கூறப்பட்டாலும், பாஜகவின் அசுர வளர்ச்சி குஜராத் மட்டுமல்ல; நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு, 182 தொகுதிகளில், தற்போது( மதியம் 12.30 மணி நிலவரப்படி), பாஜக 152 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இது பாஜகவின் மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இம்முறை பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவினாலும், பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து குஜராத்தில் யார் முதல்வராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு காரணம், செப்டம்பர் 2021 இல் விஜய் ரூபானிக்கு பதிலாக பூபேந்திர படேல் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது கட்லாடியா தொகுதியில் போட்டியிட்ட பூபேந்திர படேல், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்துவருகிறார்.

கருத்துக்கணிப்புகளைவிட தற்போது பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால் ஒரு ஆண்டு மட்டுமே முதல்வராக பணியாற்றிய பூபேந்திர படேலே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா? அல்லது கட்சியின் தலைமை ட்விஸ்ட் வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் பரப்புரையின்போது பூபேந்திர படேல் தான் முதல்வராக நீடிப்பார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். அதன்படி, பூபேந்திர படேலுக்கு முதல்வராகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com