தேர்தல் களத்தில் பணமழை.. பாஜக கணக்கில் குவிந்த ரூ.1,473 கோடி.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு செலவா?
கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த வருவாய் மற்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செய்த செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் காலத்தில் மட்டும் பாஜக தலைமைக்கு ரூ.1,472.8 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.207.17 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தின் தொடக்கத்தில், மார்ச் 15 அன்று பாஜக தலைமையகத்தின் இருப்பு ரூ.6,722.6 கோடியாக இருந்த நிலையில், மே 6 அன்று அது ரூ.7,627.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் தேர்தல் காலத்தில் மட்டும் ரூ.904.6 கோடி அளவுக்கு இருப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தேர்தல் காலத்தில் ரூ.248.55 கோடி செலவு செய்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல்களுக்காக பாஜக சுமார் ரூ.159.7 கோடி செலவு செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் பாஜக ரூ.51.56 கோடி செலவிட்டுள்ளது. பொதுப் பிரசாரத்திற்காக ரூ.44.51 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.7.05 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஊடக விளம்பரங்களுக்காக சுமார் ரூ.23.96 கோடியும், நட்சத்திரப் பிரசாரகர்களின் பயணச் செலவுக்காக சுமார் ரூ.10.04 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. விளம்பரப் பொருட்களுக்காக மேலும் சுமார் ரூ.5.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளா மற்றும் மேற்குவங்கத் தேர்தல்களுக்கான பாஜகவின் செலவின அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வருவாயைவிட, பாஜக தலைமையகத்துக்கு கிடைத்த தொகை ஏழு மடங்குக்கும் அதிகமாக இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார். ர
