ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த பாஜக முயற்சி: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜகவினர் சதித் திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தனி மாநிலம் கேட்டு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்துக்கு பாஜக தான் காரணம் என்று என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தோடர்பாக மம்தா கூறியதாவது, மேற்கு வங்காள மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக பாஜக சூழ்ச்சி வலைகளை பின்னியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கலவரத்தை தூண்டிவிட்டு இருக்கிறார்கள். இப்படி செய்வதால் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே இது நாசமாக்கிவிடும். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. மேற்கு வங்காளத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜகவினர் சதித் திட்டம் தீட்டி இருக்கிறார்கள். இதனால்தான் கலவரத்தை ஒடுக்குவதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை. மேற்கு வங்காளத்துக்கு கூடுதல் மத்திய படையை அனுப்பும்படி கேட்டோம். அதையும் மத்திய அரசு செய்யவில்லை. ஒட்டு மொத்தமாக மாநில அரசுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.