ராமர் கோயில் கட்டுவது எப்போது? பாஜக எம்பிக்கள் கேள்வி
ராமர் கோயில் கட்டுவது எப்போது என பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது.
Read Also -> “ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்
இந்த நிலையில் டெல்லியில் நேற்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ளவில்லை.
அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவீந்திர குஷ்வாகா, ஹரி நாராயண் ராஜ்பார் ஆகியோர் அயோத்தி பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என கேட்டதற்கு மற்ற எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்தான் எனவும் ஆனால் உறுப்பினர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.