நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு...பாஜக எம்.பியின் மண்டை உடைப்பு!
கடந்த செவ்வாய் கிழமை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது.
அமித் ஷாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ‘ஜெய் பீம்..ஜெய் பீம்..’ என முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், நேற்று, நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் , அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும் எனவும், பதவி விலக வேண்டும் என்று தொடர் கோஷமிட்டனர்..மேலும், விசிக , திமுக உள்ளிட்ட கட்சிகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, சஞ்சய் ரௌத், திருமாவளவன் உள்ளிட்ட எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு போட்டியாக, காங்கிரஸை கண்டித்து பாஜக உறுப்பினர்களும் கையில் பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.
காங்கிரஸ், பாஜக எம்பிக்கள் இடையேயான இந்த போராட்டம் இறுதியில் தள்ளுமுள்ளாக மாறியது. இதனால், பா.ஜக எம்.பி. பிரதாப் சாரங்கி மண்டை உடைப்பட்டது. மேலும், ராகுல் காந்திதான் தன்னை தள்ளிவிட்டதாகவும் பா.ஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, ”அவைக்கு சென்றபோது பாஜக எம்.பி.க்கள்தான் தன்னை தள்ளிவிட்டு மிரட்டினர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே அவர்களை எதிர்த்துத் தள்ளும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.உங்களின் கேமராக்களில் இது இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.