"குழந்தைகளை மிஷனரிக்கு அனுப்பாதீங்க; வீட்டில் ஆயுதங்களோடு இருங்க”- எம்.பி சர்ச்சை பேச்சு

"குழந்தைகளை மிஷனரிக்கு அனுப்பாதீங்க; வீட்டில் ஆயுதங்களோடு இருங்க”- எம்.பி சர்ச்சை பேச்சு
"குழந்தைகளை மிஷனரிக்கு அனுப்பாதீங்க; வீட்டில் ஆயுதங்களோடு இருங்க”- எம்.பி சர்ச்சை பேச்சு

இந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கூரிய கத்திகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. ப்ரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர் சர்ச்சையான கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் இந்து ஜாகரனே வேதிகேவின் தென்மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, லவ் ஜிகாத் விவகாரத்தை சுட்டிக்காட்டிய ப்ரக்யா சிங் தாக்கூர், அனைவரும் வீட்டில் ஆயுதத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அக்கூட்டத்தில் ப்ரக்யா சிங் தாக்கூர் பேசுகையில், “வீடுகளில் ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் தன்னை தானே தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. உங்களை யாரேனும் யாரேனும் வீடு புகுந்து தாக்கினால் பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும். கத்தி எப்படி காய்கறிகளை வெட்டுகிறதோ, அதேபோல அது வாய் மற்றும் தலையை கூட வெட்டும்” என வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார்.

இந்தக் கருத்து தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். லவ் ஜிகாத் பற்றி பேசியிருக்கும் இவர், “அவர்களுக்கு பாரம்பரியமாக ஜிஹாத் செய்யும் பழக்கம் இருக்கிறது. ஒருவேளை எதுவுமே இல்லையென்றால், லவ் ஜிஹாத் செய்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே காதலித்தாலும்கூட, அதில் அவர்கள் ஜிஹாத் செய்கிறார்கள். நாங்களும் (இந்துக்கள்) தான் காதலிக்கிறோம். நாங்கள் கடவுளை நேசிக்கிறோம். ஆம் ஒரு சன்னியாசி, கடவுளை நேசிப்பார்.

கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகத்தில், அனைத்து ஒடுக்குமுறையாளர்களையும் முடிவுக்குக் கொண்டுவருவது, தவறு செய்தவர்களை தண்டிப்பது ஆகியவைதான் ஒரு சன்னியாசி முன்வைப்பவையாகும். லவ் ஜிஹாத் விஷயத்திலும் இதையே சொல்கிறோம். அதை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஆகவே உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்திடுங்கள். அவர்களுக்கு நன்மதிப்பை சொல்லிக்கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளை மிஷனரிகளுக்கு அனுப்புவதை நிறுத்துங்கள். அப்படி செய்வதன் மூலம், நீங்களே உங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் பாதையை திறந்துவிடுகின்றீர்கள் என்று பொருளாகும். அந்தக் குழந்தைகள் வருங்காலத்தில் உங்கள் குழந்தைகளாக இருக்க மாட்டார்கள், உங்கள் கலாசாரத்தை அவர்கள் பின் தொடர மாட்டார்கள். அவர்கள் முதியோர் இல்ல கலாசாரத்தில் வளர்வார்கள், சுயநலவாதிகளாக மாறுவார்கள்” என்றும் பேசியுள்ளார்.

மதரீதியாக வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ள இந்த பேச்சுக்காக, எம்.பி. மீது இதுவரை கர்நாடக காவல்துறை தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இவருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com