திருமண அழைப்பிதழில் அரசாங்க முத்திரையை பயன்படுத்திய பிஜேபி எம்எல்ஏ!
பிஜேபி எம்எல்ஏ தனது மகளின் திருமண அழைப்பிதழில் மாநில அரசின் முத்திரையை பயன்படுத்தியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் மாவட்டத்தின் எம்எல்ஏவாக இருப்பவர் சுரேஷ் ராத்தோர். இவர், தனது மகளின் திருமண அழைப்பிதழில் உத்ரகாண்ட் அரசின் முத்திரை அச்சடித்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்தத் திருமண அழைப்பிதழின் ஓரத்தில் உத்ரகாண்ட் அரசின் முத்திரை இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த அழைப்பிதழில் திருமணம் தேதி இன்று (10.1.18) என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்எல்ஏ மகளின் இந்தத் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிஜேபியை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் புதுமையான அழைப்பிதழ்களை அச்சடித்து சர்ச்சைக்கு ஆளாவது தொடர் கதையாக மாறி வருகிறது. மேலும், மகளின் அழைப்பிதழில் அரசாங்க முத்திரை இடம்பெற்றிருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ் ராத்தோர் “ எல்லோரும் பெரிதுப்படுத்தும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய குற்றத்தை செய்யவில்லை. ஏழ்மை நிலையில் இருக்கும் என் பெண்ணின் திருமணத்தைப் பற்றி பேசாமல் ஏன்? எல்லோரும் அரசாங்க முத்திரை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். நானும் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன். அதனால்தான் முத்திரையைப் பயன்படுத்தினே” என்று தெரிவித்துள்ளார்.