கொரோனா : சீருடையில் இருந்த பாதுகாவலருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்ததாக பாஜக நிர்வாகி கைது!
கொரோனாவை தடுக்கும் எனக்கூறி சீருடையில் இருந்த பாதுகாவலருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்ததாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடக்கு கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியின் பாஜக நிர்வாகியாக இருப்பவர் நாராயண் சட்டர்ஜி. இவர் கடந்த திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். அதில், மாட்டு சிறுநீர் குடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் எனக்கூறி நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு மாட்டு சிறுநீர் வழங்கியதாக தெரிகிறது. அப்போது சீருடையில் இருந்த பாதுகாவலர் ஒருவருக்கும் மாட்டு சிறுநீர் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செவ்வாய்கிழமை காலை, பிண்டு ப்ராமனிக் என்ற அந்த பாதுகாவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஐபிசி 269, 278, 114 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சட்டர்ஜியை செவ்வாய்கிழமை மாலை கைது செய்தனர்.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் சயண்டன் பாசு கூறுகையில், சட்டர்ஜி பாஜக நிர்வாகிதான் எனவும் ஆனால் இந்த நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நிகழ்வில், சட்டர்ஜி குங்குமம் வைத்துக்கொண்டு தாமரை லோகோவை சட்டையில் குத்திக்கொண்டு சிறுநீர் வழங்கினார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சட்டர்ஜி கூறுகையில், “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. மற்றவர்களுக்கு வழங்குவதற்கு முன்பு அதை நானே குடித்தேன். மாட்டு சிறுநீர் கண்டிப்பாக கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கும் என்பது எனக்கு தெரியும். மாட்டு சிறுநீர் கண்டிப்பாக 100 சதவீதம் கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படும்” எனத் தெரிவித்தார்.