மீண்டும் மம்தாவிடம் திரும்பும் பாஜக நிர்வாகிகள் - என்ன நடக்கிறது மேற்கு வங்க அரசியலில்?

மீண்டும் மம்தாவிடம் திரும்பும் பாஜக நிர்வாகிகள் - என்ன நடக்கிறது மேற்கு வங்க அரசியலில்?
மீண்டும் மம்தாவிடம் திரும்பும் பாஜக நிர்வாகிகள் - என்ன நடக்கிறது மேற்கு வங்க அரசியலில்?

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜகவில் தஞ்சம் புகுந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும், தற்போது மீண்டும் தாய்க் கழகத்திற்கு திரும்ப தொடங்கி உள்ளனர். மேற்கு வங்க அரசியலில் என்ன நடக்கிறது? - இதோ ஒரு பார்வை...

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்ட முனைப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகம் - கேரளா வரிசையில், நுழைய முடியாத இரும்புக் கோட்டையாகவே மேற்கு வங்கம் இருந்தது. 'மத்தியில் ஆட்சியில் வலுவான நிலையில் இருக்கும் இந்த நேரத்தை தவறவிட்டால், மீண்டும் வாய்ப்பு கிடைப்பது அரிது' என உணர்ந்த பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரும், மேற்கு வங்கத்தை குறிவைத்து திட்டமிட்டு காய்களை நகர்த்தினர்.

அதில் முக்கியமானது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பலத்தை, அதன் கட்சியினரை கொண்டே உடைக்க முயன்றது. முதல்வர் மம்தா பானர்ஜியின் வலதுகரமாக பார்க்கப்பட்ட முகுல் ராய் தொடங்கி அடுத்தடுத்த முக்கிய தலைவர்களை தங்கள் வசம் இழுத்து தங்கள் இருப்பை உறுதிப்படுத்த தொடங்கினர் பாஜகவின் மூத்த தலைவர்கள். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரியை பாஜக வெற்றிகரமாக தங்கள் பக்கம் இழுக்க, 'அவ்வளவுதான், மம்தாவின் கதை முடிந்தது' என அனைவரும் பேசத்தொடங்கினர். ஆனால் அந்த எண்ணங்கள் அனைத்தையும் தேர்தல் முடிவுகளில் அடித்து நொறுக்கினார் மம்தா பானர்ஜி.

200 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது இந்தியாவில் பாஜகவை எதிர்க்கும் மிக வலுவான தலைவர்களில் ஒருவர் என்ற நிலையும் அவர் எட்டினார். இதன்விளைவாக, தேர்ந்த நேரத்தில் பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பலரும் தாய்க் கழகத்திற்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

பாஜகவில் தற்போது துணைத் தலைவராக உள்ள முகுல் ராய், சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இவை ஒருபுறமிருக்க தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எங்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக கூறியிருப்பது மேற்கு வங்க மாநில அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.

இதன் காரணமாகவே சுவேந்து அதிகாரி நேற்றைய தினம் அவசர அவசரமாக டெல்லி வந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் தனித்தனியாக சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில், 'குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு கோரிக்கை வைப்போம்' என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால் இத்தகைய கோரிக்கைகள் மக்களுக்கு நன்மை கொடுப்பதாக இருக்காது என மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, தற்போது பாஜகவில் சேர்ந்த ரஜீப் பானர்ஜி கூறினார். இது தற்பொழுது முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் புயல் உள்ளிட்ட பாதிப்புகளால் மேற்கு வங்கம் சந்திக்கக்கூடிய பிரச்னைகளுக்கு கட்சி கவனம் செலுத்த வேண்டுமென அவர் பேசியிருப்பது பல்வேறு முணுமுணுப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் பெங்காலி மொழி பேசாதவர்களை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தியது, மம்தா பானர்ஜி என்ற ஒற்றை ஆளுக்கு எதிராக பாஜகவின் மொத்த பலத்தையும் பயன்படுத்தியது தவறென்றும், அதுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த பல தலைவர்களும் வெளிப்படையாகவே ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்கள், கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் முகுல் ராய் தனது உடல் நலம் சரியில்லாத மனைவியை பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருவதால் தான் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கு ஏற்றாற்போல் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலின்போது 34 சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருந்தனர். அப்போதிருந்த நிலையில் அவர்களில் வெறும் 13 பேருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனவே ஏனையவர்கள் பாஜக மீது சற்று அதிர்ச்சியில் இருந்ததாகவே சொல்லப்படுகின்றது. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிடித்து இருந்தது. பாஜக 70 இடங்களுக்கும் மேலாக பிடித்திருந்தது.

எனவே அடுத்த அடுத்த நாட்களில் மேற்கு வங்க அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதாக மூத்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com