
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன் கர்நாடக தேர்தல் தேதியை ட்வீட் செய்து பாஜக பிரமுகர் ஒருவர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் காலை 11மணிக்கு அறிவிப்பார் எனவும் கூறப்பட்டது.அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் 11மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தலையொட்டி என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்திக்கொண்டிருந்தார். தேர்தல் தேதி குறித்து அவர் அப்போது எதுவும் கூறவில்லை. இந்நிலையில் ட்விட்டரில் மே12ஆம் தேதி கர்நாடகத்தில் தேர்தல் என்ற செய்து வலம் வந்துக்கொண்டிருந்தது. இதனை பாஜகவின் இணையதள அணியை சேர்ந்த அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கர்நாடகாவில் மே12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மே18 எனப் பதிவிட்டிருந்தார்.சிறிது நேரத்தில் அவரது பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
மே12ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே15ல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திர அமைப்பு அது தன்னிச்சையாக செயல்படக்கூடியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன் பாஜக பிரமுகர் ஒருவர் தேர்தல் தேதியை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் பாஜக முறைகேடு செய்து வெற்றி பெறுகிறது என எதிர்க்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படுகிறது.இந்நிலையில் தேர்தல் குறித்த அமித் மால்வியாவின் ட்வீட் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.