மேற்குவங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை: முழு அடைப்புக்கு அழைப்பு..!

மேற்குவங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை: முழு அடைப்புக்கு அழைப்பு..!
மேற்குவங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை: முழு அடைப்புக்கு அழைப்பு..!

பாஜக தலைவர் மனிஷ் சுக்லா வடக்கு கொல்கத்தாவிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளூர்வாசிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சிதான் இந்த கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள பாஜக, பராக்போர் பகுதியில் இன்று 12 மணிநேர முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, இது உள்கட்சி பகையால் நடந்த கொலை என திரிணாமுல் கட்சி கூறியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தான்கர், டிஜிபியையும், உள்துறை செயலாளரையும் சந்திக்குமாறு கூறியுள்ளார்.

நேற்று மாலை பராக்போர் காவல்நிலையத்திற்கு அருகில் திடீரென மோட்டார்சைக்கிளில் வந்த மனிதர்கள், பராக்போர் நிறுவன மாவட்டக் குழுவின் பாஜக உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான மனிஷ் சுக்லாவை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் பராக்போர் பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் கமிஷ்னர் மனோஜ் வர்மா மற்றும் கூடுதல் கமிஷ்னர் அஜய் தாகூர் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமளியில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தி உள்ளது. இதனால் மூத்த பாஜக தலைவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

பாஜகவின் பொது செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா இதுபற்றி கூறுகையில், பராக்போரின் பாஜக எம்.பி அர்ஜுன் சிங்கும், மனிஷ் சுக்லாவும் நெருக்கமாக இருந்ததாகவும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிதான் இந்த கொலைக்கு காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவல் நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் நடந்ததால், போலீஸார்மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதுபோன்ற செயலில் ஈடுபடுவதற்காக மம்தா பானர்ஜியை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com