மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: பாஜக எம்.எல்.ஏ அதிகாலை கைது!
உத்தர பிரதேசத்தில் 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை சிபிஐ கைது செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 8ம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் சிறுமியின் தந்தையான பப்பு சிங் என்பவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, புகாருக்குள்ளான பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் தனது ஆதரவாளர்களுடன், மாணவியின் தந்தையை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தந்தை உயிரிழந்தார்.
இது தொடர்பான புகாரில் எம்எல்ஏவின் சகோதரரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம், விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
புகாருக்குள்ளான எம்எல்ஏ-வை இதுவரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இன்று அதிகாலை கைது செய்தனர்.