'ஜெய் ஸ்ரீ ராம்' to 'ஜெய் மா துர்கா'..- மே.வங்கத்தில் மத அரசியலை தீவிரப்படுத்துகிறதா பாஜக?

'ஜெய் ஸ்ரீ ராம்' to 'ஜெய் மா துர்கா'..- மே.வங்கத்தில் மத அரசியலை தீவிரப்படுத்துகிறதா பாஜக?
'ஜெய் ஸ்ரீ ராம்' to 'ஜெய் மா துர்கா'..- மே.வங்கத்தில் மத அரசியலை தீவிரப்படுத்துகிறதா பாஜக?

சமீபத்தில் கொல்கத்தாவின் டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டத்துக்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் கான்வாய் கற்களால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் முகுல் ராய் உள்ளிட்டோருக்கு சிறுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிய அரசியல் பிரச்னையாக மாறியது.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, நட்டா சனிக்கிழமை மீண்டும் மேற்கு வங்கம் வந்தார். உழவர் நிகழ்ச்சிக்காக வந்தாலும், வரவிருக்கும் தேர்தலுக்கான பிரசாரத்திலும் கலந்துகொண்டார். ரோட் ஷோ, வீட்டுக்கு வீடு வீடாக பிரசாரம் செய்து விவசாயிகளைச் சந்திப்பது என அன்றைய நாள் மிகவும் பிசியாக இருந்த நட்டா, ஒவ்வொரு இடத்திலும் பேசும்போதும் சில வார்த்தைகளை அடிக்கடி உச்சரித்தார். 'ஜெய் மா துர்கா, ஜெய் மா காளி' என்ற புதிய முழக்கங்கள்தான் அவை.

பாஜகவிடம் இருந்து 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷத்தை கேட்ட மேற்கு வங்க மக்களுக்கு அக்கட்சித் தலைவர்கள் திடீரென இப்படி வங்காள தெய்வங்களான 'ஜெய் மா துர்கா, ஜெய் மா காளி' என கோஷம் எழுப்பவது சற்று புதிதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷம் எப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே முதன்மை முழக்கமாக இருந்து வருகிறது. பாஜகவின் முக்கிய முழக்கங்களின் இந்த மாறுதல் சுவாரஸ்யமானது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், கட்சி அதன் சில அடிப்படைக் கொள்கைகளை மாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது என்று அவர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்க மக்கள் பாரம்பரியமாக நாட்டார் தெய்வங்களை வணங்குகிறார்கள். துர்கா மற்றும் காளி அவர்களின் முக்கிய தெய்வங்கள். கிருஷ்ணர் அல்லது ராமின் வழிபாடும் அவர்களின் மத மரபுகளில் இடம்பெறுகிறது, ஆனால், கொண்டாடப்படும் அளவுக்கு அந்த தெய்வங்கள் அவர்களின் ஒரு பகுதியாக இது இல்லை. பாஜகவின் மூத்த தலைவர் இதுதொடர்பாக கூறும்போது, ``வங்க மக்கள் மா காளி மற்றும் மா துர்காவுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறார்கள். அந்த தெய்வங்களை ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாக அவர்கள் பார்க்கிறார்கள். மேலும், மா காளி சக்தி மற்றும் தீர்மானத்தின் தெய்வம். இந்த வழியில் வங்க மக்களை அடைவது எளிது. இதனால் மக்களின் மனங்களை அறிந்து நாங்கள் கொள்கைகளை உருவாக்கி வருகிறோம்" என்று The Print-க்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராமர் முதல் துர்கா, காளி வரை!

பாஜகவின் இந்த திடீர் கோஷம், முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது ஆளும் திரிணாமுல் காங்கிரஸை எதிர்கொள்ள முயற்சிக்கும் தேசிய கட்சியின் வழி இது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். `ஜெய் மா துர்கா, ஜெய் மா காளி' ஆகிய இரண்டும் பல தசாப்தங்களாக வங்காளத்தின் அரசியலில் முக்கிய இடம்பெற்றுள்ளது. அதுவும் பாஜக வந்த பிறகுதான். பாஜக தனது கூட்டங்களில் முக்கிய கோஷமாக இந்த இரண்டையும் முன்வைக்கிறது. இதற்கு முன் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இந்த கோஷங்களை எப்போதும் பயன்படுத்துவது கிடையாது. ஆனால், பாஜக அதனை மாற்றி வருகிறது. இதன்மூலம் பாஜக மாநிலத்தில் அரசியல் நிலையை உடைக்கிறது.

பிரசாரங்களின் போது மத கோஷங்களையோ அல்லது தெய்வப் பெயர்களைக் கோஷமிடுவதையோ வங்காளம் ஒருபோதும் கண்டதில்லை. ஆனால், பாஜக அதை கட்டாயப்படுத்துகிறது. இதை அரசியல் முழக்கமாக மாற்றி வருகிறது. பாஜகவின் இந்தப் புதிய கொள்கை மாற்றத்துடன் சுவாரஸ்யமானது என்று அரசியல் ஆய்வாளர் பிஸ்வநாத் சக்ரவர்த்தி கூறியிருக்கிறார்.

``வட இந்திய மாநிலங்களில் முதன்மை செல்வாக்கைக் கொண்ட ஒரு கட்சி (பாஜக), ராமரை வணங்குகிறது. வங்காளத்தில் அதிக கவனத்தைப் பெற அதன் அடிப்படைக் கொள்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிரசாரங்களுக்கு அவர்கள் என்ன பதிலைப் பெறுவார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். பாஜக தலைவர்கள் தெய்வங்களின் பெயர்களை முழக்கமிடுவதை நாங்கள் பார்த்ததில்லை. உத்தரப் பிரதேசத்தில் ராமர் பற்றி மட்டும் பிரசாரம் செய்த அதே கட்சி இங்கு 'ஜெய் மா துர்கா', 'ஜெய் மா காளி' என்று கூச்சலிடுகிறது.

`ஜெய் மா காளி' மாநிலத்தில் உள்ள அனைத்தும் மதங்கள் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், முதன்மையாக மதம் மாறியவர்கள், மாநிலத்தின் சில கிராமப்புறங்களில் மா காளியை வணங்குகிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், 'ஜெய் ஸ்ரீ ராம்' அதை அடைய முடியாது. இது பாஜகவுக்கு ஒரு கொள்கை விஷயம்" என்று அரசியல் ஆய்வாளர் பிஸ்வநாத் சக்ரவர்த்தி இதுதொடர்பாக கருத்து கூறியுள்ளார்.

எப்படியும் இந்த முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்த்து வருகிறது பாஜக. அதன் ஒரு பகுதியாகவே மத முழக்கங்களை முன்வைத்து பிரசாரத்தை துவங்கியுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். முழக்கத்தோடு நிற்கவில்லை. பாஜக தலைவர்கள் மேற்கு வங்கம் வரும்போதெல்லாம் எதாவது ஒரு காளி கோயில் அல்லது துர்க்கை கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பாஜகவின் இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் ஈடுபடுகிறோதோ இல்லையோ, ஆனால் ஆளும் திரிணாமுல் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் இதை எதிர்த்து எங்கும் திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Print

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com