மேற்குவங்கத்தில் இரண்டுகட்ட தேர்தல்.. மம்தாவுக்குச் சறுக்கல்.. பாஜகவுக்கு சாதகம்!
294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கம், இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, இம்மாநிலத்தில் பலகட்டங்களாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இந்த முறை, ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இது, பாஜகவுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பது பாஜகவுக்கு பெரிய சாதகமாக இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு ஏன் சாதகம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கம், இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, இம்மாநிலத்தில் பலகட்டங்களாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. 2024 மக்களவைத் தேர்தலின்போதுகூட, மேற்கு வங்காளத்தில் ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த முறையும் அவ்வாறே நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் ஆட்சியைப் பிடிக்கப் போட்டிபோடும் பாஜகவும் ஒரேகட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்திருந்தன.
ஆனால், இந்த முறை மேற்கு வங்கத்தின் வரலாற்றை மாற்றி, அங்கு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை முதல் ஆளாக பாஜக வரவேற்றுள்ளது. இந்த இரண்டுகட்ட வரவேற்புக்குப் பின்னால், பாஜகவுக்கு இது ஒரு பெரிய சாதகமாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான தேர்தல் கட்டங்களாலேயே திரிணாமுல் காங்கிரஸ் பயனடைந்து வந்ததாக நன்கு உணரும் பாஜக இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளது. காரணம், வாக்குப்பதிவு முடிந்த பகுதியிலிருந்து அடுத்தகட்டமாக தேர்தல் நடைபெறும் பகுதிக்கு அதன் தொண்டர்கள் அணிதிரண்டு, கட்சியின் வாய்ப்புகளை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தனர்.
ஆனால், இந்த முறை தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதால், அது திரிணாமுல் காங்கிரஸுக்கு நெருக்கடியை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாஜகவுக்கும் பலகட்ட தேர்தல்கள் நெருக்கடியைக் குறைத்திருக்கின்றன. பொதுவாக பலகட்ட தேர்தல்களில், அக்கட்சிக்கு, பாதுகாப்புப் படைகளின் இயக்கம் மற்றும் மேலாண்மை ஆகியன சிரமங்களை ஏற்படுத்துகின்றன. இது, இரண்டு கட்டங்களாக நடைபெறும்போது அதன் சுமை தற்போது குறையத் தொடங்கியிருப்பதாகக் கணக்கிடுகின்றனர். அடுத்து இருகட்டங்களாகவே தேர்தல் நடைபெறுவதால், பாஜக தனது வேட்பாளர்களை இறுதிசெய்ய அதிக நேரம் கிடைத்துள்ளது என நம்புகிறது. தவிர, அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் விரிவாக பிரசாரம் செய்ய முடியும் எனவும் கருதுகிறது. இதன்காரணமாகவே, மேற்கு வங்கத்தின் இரண்டுகட்ட தேர்தல் பாஜகவுக்கு பெரிய சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

