பீகார் முடிவுகள்: நிதிஷ் கட்சியைவிட அதிக இடங்களைக் கைப்பற்றும் பாஜக!

பீகார் முடிவுகள்: நிதிஷ் கட்சியைவிட அதிக இடங்களைக் கைப்பற்றும் பாஜக!
பீகார் முடிவுகள்: நிதிஷ் கட்சியைவிட அதிக இடங்களைக் கைப்பற்றும் பாஜக!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் - பாஜக கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றும் விதமாக முன்னிலை நிலவரம் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டணிக்குள் பாஜக அதிக இடங்களின் முன்னிலை வகிப்பது கவனத்துக்குரியது.

 நீண்ட நேரம் இழுபறி நீடித்து வந்ததற்குப் பின், காலை முற்பகல் 11.45 நிலவரப்படி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாளம் - பாஜக கூட்டணி 133 இடங்களில் முன்னிலை வகித்தது. தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களில் முன்னிலை பெற்றது. லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், இதர கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலை வகித்தன. வெற்றி - முன்னிலை நிலவரத்தைப் பொறுத்தவரையில், பீகாரில் ஆட்சியமைப்பதற்கு, பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நிதிஷ் - பாஜக கூட்டணி நெருங்கிவிட்டது.

 அதிக இடங்களில் பாஜக...

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டது. இதில், தற்போதைய சூழலில் 53 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் இக்கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை 19 இடங்களை இழக்கும் நிலையில் உள்ளது. அதேவேளையில், இந்தக் கூட்டணியில் 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 73 இடங்களைக் கைப்பற்றும் சூழலில் உள்ளது. கடந்த தேர்தலில் 53 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, இம்முறை கூடுதலாக 20 இடங்களைக் கைப்பற்றியிருப்பது கவனத்துக்குரியது.

இந்தத் தேர்தலில் இரு கூட்டணிகளுமே இளைஞர்களை முன்வைத்து தங்களது பரப்புரையை மேற்கொண்டன. இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என மகா கூட்டணி உறுதியளித்த நிலையில், 19 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என பதிலடி தந்தது தேசிய ஜனநாயக கூட்டணி. மேலும், கூடுதலாக இந்தி மொழியில் மருத்துவம், பொறியியல் கல்வி கற்பிக்கப்படும் எனவும் வாக்குறுதி தந்தது.

தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததும் நினைவு கூறத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com