பாஜக ஆட்சி மன்ற குழுவில் அதிரடி மாற்றம்..வானதி சீனிவாசன் உள்ளே! ஆதித்யநாத் புறக்கணிப்பா?

பாஜக ஆட்சி மன்ற குழுவில் அதிரடி மாற்றம்..வானதி சீனிவாசன் உள்ளே! ஆதித்யநாத் புறக்கணிப்பா?
பாஜக ஆட்சி மன்ற குழுவில் அதிரடி மாற்றம்..வானதி சீனிவாசன் உள்ளே! ஆதித்யநாத் புறக்கணிப்பா?

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு மற்றும் ஆட்சி மன்ற குழு மாற்றியமைக்கப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற (ஆட்சி மன்ற) குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை உறுப்பினர் சத்யநாராயணன் ஜட்டியா, பா.ஜ.க. தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமணன் மற்றும் தேசியச்செயலாளர் சுதா யாதவ் ஆகியோர் புதிதாக நாடாளுமன்ற (ஆட்சி மன்ற) குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுதான் பா.ஜ.க.வின் முடிவெடுக்கும் மிகப்பெரிய அமைப்பாகும். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த மாறுதலை சமூக ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் அதிக பிரதிநிதித்துவம் உடையதாக மாற்றவே இந்தப் புதிய நியமனங்களை மேற்கொண்டுள்ளதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிதாக கட்சியில் சேர்க்கப்பட்டவர்களில் லால்புரா சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். இவர்தான் இச்சமூகத்தில் இருந்து பா.ஜ.க. நாடாளுமன்ற குழுவில் நியமிக்கப்பட்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ், ஓம் மாதுர் மற்றும் பா.ஜ.க. மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹுசைன், ஜூவல் ஓரன் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வித்திட்ட பெருமை யோகி ஆதித்யநாத்துக்கும் உண்டு. இந்நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுவில் யோகி ஆதித்யநாத் முக்கியப் பதவி வழங்கி அலங்கரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக்குழு, மத்திய தேர்தல் குழுவில் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இருவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும் கர்நாடக மாநிலம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

- விக்னேஷ் முத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com