"பெண் உறுப்பினரொருவர் (மஹூவா) இப்படி அநாகரீகமாக பேசுவது அதிர்ச்சியளிக்கிறது"- பாஜக

"பெண் உறுப்பினரொருவர் (மஹூவா) இப்படி அநாகரீகமாக பேசுவது அதிர்ச்சியளிக்கிறது"- பாஜக
"பெண் உறுப்பினரொருவர் (மஹூவா) இப்படி அநாகரீகமாக பேசுவது அதிர்ச்சியளிக்கிறது"- பாஜக

ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பிய பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதானி குழுமத்திற்கு பல வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க உள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் தக்க பதிலடி கொடுப்பார் என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.



இன்று மாலை 3:30 மணி அளவில் பிரதமர் மோடி மக்களவையில் பேசுவார் என அவர்கள் தெரிவித்தனர். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று பிரதமர் கலந்து கொள்வார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மாநிலங்களவையில் பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்பார் என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல் காந்தி எழுப்பிய பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அவர்கள் கூறினர். இதற்கிடையே ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்றும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா தகாத வார்த்தையை மக்களவையில் பயன்படுத்தினார் என்றும் குறித்தும் இன்று பாஜக புகார் அளிக்க உள்ளது. ராகுல் காந்தி தனது கேள்விகளுக்கான பதில்களை கூட கேட்காமல் மக்களவையில் இருந்து வெளியேறினார் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி பேசிய பிறகு பாரதிய ஜனதா கட்சியின் நிஷிகாந்த் தூபே ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்து பேசினார். குறிப்பாக `அதானி குழுமம் மோடிக்கு நெருக்கமாக உள்ளதால் தான் அதிவேக வளர்ச்சியை பெற்றது’ என்ற ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு, “காங்கிரஸ் முதலமைச்சர்கள் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதானி குழுமத்திற்கு ஒப்பந்தங்களை அளித்தது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

அதானியுடன் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ராகுல் காந்தி மக்களவையில் காட்டிய நிலையில், அதானி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாட்ரா மற்றும் காங்கிரஸ் முதல்வர்கள் ஆகியோருடன் உள்ள புகைப்படங்களை தூபே மக்களவையில் காட்டினார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைத்ததன் பின்னணியில் ஊழல் இருந்ததா என அவர் கேள்வி எழுப்பினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா பேசியபோது, பலமுறை கூட்டணி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மஹூவா அவர் பேசத்தகாத வார்த்தை ஒன்றை மக்களவையில் பேசினார் என பாஜக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். பெண் உறுப்பினர் ஒருவர் இப்படி அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில், மஹூவா மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசினார். இந்த சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து இன்று பாஜக புகார் அளிக்க உள்ளதால் மக்களவையில் இன்று கடுமையான விவாதங்கள் நடைபெறும் என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com