“தைரியம் இருந்தா மோடியை எதிர்த்து நில்லுங்க..” மம்தாவுக்கு சவால் விடுத்த பாஜக தலைவர்!

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா களமிறங்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த அக்னிமித்ர பால் தெரிவித்துள்ளார்.
மோடி, மம்தா, அக்னிமித்ர பால்
மோடி, மம்தா, அக்னிமித்ர பால்ட்விட்டர்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணியின் முதல் 3 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 4-வது கூட்டம் 5 (மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா) மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கடந்த டிச.19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரையும், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் I-N-D-I-A கூட்டணி சார்பில் காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதை, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் வரவேற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: ”இந்தி தெரியாதா..” டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர்.பாலுவைச் சீண்டிய நிதிஷ்குமார்.. நடந்தது என்ன?

இந்த நிலையில், ”2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட வேண்டும்” என்று அம்மாநில பாஜக மகளிரணி தலைவர் அக்னிமித்ர பால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அக்னிமித்ர பால், ”தொகுதிப் பங்கீடு செய்வதற்கு முன்பாக மம்தா பானர்ஜிக்கு தைரியம் இருந்தால் பிரியங்கா காந்தி இடத்தில் அவர் போட்டியிட வேண்டும். அவருக்குப் பிரதமராகும் விருப்பம் இருக்கிறதல்லவா? பிரதமர் மோடியை எதிர்த்து நமது முதல்வர் போட்டியிட வேண்டும். அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் நட்சத்திர தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிட்டதால் அங்கு பிரியங்கா போட்டியிடுவது கைவிடப்பட்டது. பிரதமர் மோடி, வாரணாசி மக்களவைத் தொகுதியில் 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து தற்போதைய டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். நரேந்திர மோடி 5,81,022 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 2,09,238 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவியிருந்தார்.

இதையும் படிக்க: மீண்டும் அணு ஆயுத சோதனை? சீனாவின் ‘சீக்ரெட்’டை கண்டுபிடித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கான எதிர்ப்பை வலுப்படுத்த I-N-D-I-A கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சைத் தொடங்கவும், ஒருங்கிணைந்த பிரசாரத்தை உருவாக்கவும் தேர்தல் அறிக்கையை இறுதிசெய்யவும் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார்.

I-N-D-I-A கூட்டணி
I-N-D-I-A கூட்டணிட்விட்டர்

I-N-D-I-A கூட்டணி கூட்டத்தின்போது, இந்த மாதம் (டிச.31) இறுதிக்குள் தொகுதிப் பங்கீடு பற்றி இறுதிசெய்யுமாறு கூட்டணிக் கட்சிகளை மம்தா வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவி.. 4 ஆண்டுகளாக தேடும் போலீஸ்... தகவல் தெரிவித்தால் சன்மானம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com