“கருணாநிதி பேசும் போது இவ்வளவு எதிர்ப்பு இல்லை; ஆனால் ஸ்டாலின் காலத்தில்..”-பத்திரிகையாளர் ப்ரியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடக்கும் இந்த காலக்கட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த காலக்கட்டத்தை விட மிகவும் சவாலானது. கருணாநிதி சனாதனம், இந்துத்துவா, ஆரியத்தை பற்றி பேசும் போது தமிழகத்தில் அந்த அளவிற்கு எதிர்ப்புகள் இல்லை.
ப்ரியன், மு.க.ஸ்டாலின்
ப்ரியன், மு.க.ஸ்டாலின்pt web

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடு மிக வேகமாக தயாராகிக் கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது மேடைப் பேச்சுக்களில் பிரச்சார நெடியை மிக வேகமாக கலக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விவாதங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி மூன்று கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சூழலில் மத்தியில் ஆளும் பாஜக அரசோ தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த சூழலில் பாஜக, காங்கிரஸ் கட்சியை எவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கிறதோ அவ்வளவு மூர்க்கமாக திமுகவையும் எதிர்க்கிறது.

ஒரு மாநில கட்சியை, மத்தியில் ஆளும் தேசியக் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பேச்சுகளில் சுட்டிக் காட்டுகின்றனர். போபாலில் பிரதமர் மோடி ஆரம்பித்துவைத்த இந்த போக்கு பாஜக தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒலிக்கிறது. திமுகைவை குற்றம் சாட்டும் பாஜக தொடர்ச்சியாக இரு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. திமுக வாரிசு அரசியல் செய்கிறது., திமுக ஊழல் கட்சி..

இது ஒருபுறம் இருக்க திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் திமுகவின் முக்கியத்துவத்தை கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. அண்மையில் எதிர்க்கட்சி கூட்டணியில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் திமுகவின் எம்.பி. டி.ஆர்.பாலு இடம் பெற்றுள்ளார். பிரச்சார திட்டமிடல் குழுவில் எம்.பி. திருச்சி சிவா இடம்பெற்றுள்ளார். சமூக ஊடக செயல்பாட்டுக் குழுவில் எம்.பி.தயாநிதி மாறன், ஊடக செயல்பாட்டுக்குழுவில் எம்.பி. கனிமொழி, ஆய்வுக்குழுவில் எம்.பி. ஆ.ராசா இடம்பெற்றுள்ளார். இண்டியா கூட்டணியை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட குழுவில் திமுகவைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் ஆர்.எஸ்.எஸ். செயலாளர் வரை எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் உதயநிதியின் பேச்சை விமர்சிக்கும் போது இந்தியா கூட்டணியையும் ராகுல் காந்தியையும் இணைத்தே விமர்சிக்கின்றனர். வழக்கம் போல் திமுக இதை, தங்களைப் பார்த்து பாஜக பதற்றமடைகிறது என்கிற ரீதியிலேயே கையால்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்ட்விட்டர்

இது குறித்து கருத்து கேட்பதற்காக மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியனை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “முதலாவது பாஜகவின் சித்தாந்தமும் திமுகவின் சித்தாந்தமும் நேர் எதிரானது. இரண்டாவது இந்தியா என்ற கூட்டணியை கட்டமைப்பதில் ஸ்டாலின் பங்கு மிக முக்கியமானது. மூன்றாவது நாடாளுமன்றத்தில் திமுக மூன்றாவது பெரிய கட்சி. இந்துத்துவா சித்தாந்தம் மக்களைப் பிரிக்கும் சித்தாந்தம், பெண்களுக்கு முன்னேற்றம் கொடுக்காத சித்தாந்தம், மக்களைப் பின்னுக்குத் தள்ளும் சித்தாந்தம் என்பது திமுகவின் நிலைப்பாடு. திராவிடம் காலாவதியானது, திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்பது பாஜக சொல்லும் விஷயம்.

ஆனால் தமிழ்நாடு கிட்டத்தட்ட 70 வருட காலமாக திராவிட இயக்கங்களிம் கோஷத்தை கேட்டு வந்துள்ளது. ஆனால் வரும் காலங்களில் தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்று நினைக்கும் பாஜக திமுகவை எதிர்க்க சில விஷயங்களை கையில் எடுக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடக்கும் இந்த காலக்கட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த காலக்கட்டத்தை விட மிகவும் சவாலானது. கருணாநிதி சனாதனம், இந்துத்துவா, ஆரியத்தை பற்றி பேசும் போது தமிழகத்தில் அந்த அளவிற்கு எதிர்ப்புகள் இல்லை. பாஜகவிற்கு ஆளும் இல்லை.

ஆனால் இன்றோ மத்தியில் 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆள், அம்பு, சேனை என அனைத்து பலத்துடனும் தமிழ்நாட்டில் இறங்கி ஓரளவிற்கு ஆட்கள் சேரும் அளவிற்கு கூட்டத்தை வைத்துள்ளார்கள். தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பது தெரியாது.. ஆனால் ஆட்களை சேர்க்கும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளார்கள். அதிமுகவை பாஜக ஒரு திராவிட கட்சியாகவே கருதவில்லை. ஆனால் திமுக அவர்களது சித்தாந்தத்திற்கு நேரெதிராக இருப்பதால் அவர்களை எதிர்க்கிறார்கள்.

தமிழகத்தில் திமுகவை ஒழித்தால் தான் காலூன்ற முடியும் என நினைக்கிறார்கள். அமைச்சர் உதயநிதி பேசும் போது அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டு இருந்தார், அவர் பதவி விலக வேண்டும் என சொல்கிறார்கள். காற்றில் கத்திச்சண்டை போடவேண்டும் என நினைக்கின்றனர் தமிழ்நாடு பாஜகவினர்.

இந்தியா கூட்டணி சரியான அளவில் கட்டமைக்கப்பட்டு வருவதால் அதை எப்படியாவது தடுக்க முடியுமா என பார்த்தார்கள். அதற்கு உதயநிதியின் பேச்சை எடுத்துக்கொண்டு காங்கிரஸையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி பாஜகவினர் பேசிக் கொண்டுள்ளனர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com