“அனைவரும் மாப்பிள்ளைகள்...” எதிர்க்கட்சிக் கூட்டத்தை விமர்சித்த பாஜக!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒன்று திரட்டிய எதிர்க்கட்சி கூட்டத்துக்கு பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்
எதிர்க்கட்சிகள் கூட்டம்புதிய தலைமுறை
Published on

பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்று அக்கட்சித் தலைவர்களுடன் இணைந்து பாட்னாவில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார். இதில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆம் ஆத்மி எனப் பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பாஜக அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் 2வது சுற்று கூட்டம் அடுத்த மாதம் ஹிமாச்சலில் நடைபெற இருப்பதாகவும், அக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையேற்று நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதிஷ்குமார் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாஜக கடுமையாக விமர்சித்து உள்ளது. இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “பிரதமர் மோடியை உலக நாடுகள் புகழ்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது சுயநலக் கூட்டணி. இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தற்போது அவரது பேரனை வரவேற்கின்றனர்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாட்னா கூட்டம் வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு மட்டுமே. இந்த கூட்டம் பிரதமர் மோடிக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் ஒரு நாடகம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா, ஜே.பி.நட்டா
அமித்ஷா, ஜே.பி.நட்டாtwitter

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி, “எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அனைவரும் மாப்பிளைதான். இது, ஒரு கல்யாண் ஊர்வலம் போன்றது” எனக் கேலி செய்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ”மோடியை எதிர்த்துப் போராட காங்கிரசால் மட்டும் முடியாது என்ற செய்தியை நாட்டிற்குச் சொல்லி இவர்கள் ஒன்றுசேர்வது வேடிக்கையானது. பிரதமர் மோடியை காங்கிரஸால் மட்டும் தோற்கடிக்க முடியாது என்பதாலேயே பிற கட்சிகளின் உதவியை இவர்கள் நாடியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத்
ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத்twitter

பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத், “நிதிஷ்குமார், பாட்னாவில் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்காக திருமண ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஊர்வலத்தின் மாப்பிள்ளை (பிரதமர் வேட்பாளர்) யார்? அங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களை பிரதமர் வேட்பாளராகவே கருதுகின்றனர்” என்றார்.

அதுபோல் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவும் இக்கூட்டத்தை விமர்சித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “எதிர்க்கட்சி கூட்டத்தால் ஒரு பயனும் இல்லை. உப்பு சப்பாகத்தான் அந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. போட்டி என்றால் ஒரு முடிவு இருக்க வேண்டும். இந்தக் கூட்டம், மாப்பிள்ளை இல்லாத திருமணமாக ஒன்றுகூடி முடிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் பாஜக கூறிய இந்தக் கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளில் ஒன்றான திமுக தக்க பதிலடி கொடுத்துள்ளது.

அதன்படி இதுகுறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், “எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓர் அணியில் திரள வேண்டும். பாஜகவின் எச்சரிகைக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com