சண்டிகர் மேயர் தேர்தல் | பாஜக வேட்பாளர் வெற்றி!
பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரின் மாநகராட்சி மேயர் தேர்தல், கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு குல்தீப் சிங் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 36 மொத்த வாக்குகளும் பதிவாகின. இதில் மனோஜ் சோங்கருக்கு 16 வாக்குகளும், குல்தீப் சிங்கிற்கு 12 வாக்குகளும் கிடைத்தன. எஞ்சிய I-N-D-I-A கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 8 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும், அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் எனவும் குற்றச்சாட்டுகளை வைத்தது அக்கூட்டணி. தேர்தல் அதிகாரி தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை அனுகினர்.
இதன் பின்னர், நீதிபதிகள், ”தேர்தல் அதிகாரி அனில் மாஷி மிகப்பெரிய தவறு செய்து தனது அதிகார வரம்பை மீறியும், விதிமுறைகளை மீறியும் செயல்பட்டு உள்ளார்” என முடிவு செய்து முந்தைய தேர்தல் முடிவுகளை சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
இந்த நிலையில், சண்டிகரில் மீண்டும் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜவின் ஹர்பிரீத் சிங் கவுர் பாப்லா வெற்றி வாகை சூடினார். 36 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி - காங்கிரஸ் வேட்பாளர் பிரேம் லதாவை, பாப்லா இரண்டு ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பாஜக வேட்பாளர் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா 19 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியினர் ஆதரவுடன் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதா 17 ஓட்டு பெற்று தோல்வி அடைந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜெய்ஸ்ரீ தாகுரின் மேற்பார்வையில் சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.