மக்களவை தேர்தல் 2024 | கங்கணா ரணாவத் To அருண் கோவில்.. பாஜக அறிவித்த நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல்

கங்கணா ரணாவத் , அருண் கோவில் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களை மக்களவை தேர்தல் வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது.
நட்சத்திர வேட்பாளர்கள்
நட்சத்திர வேட்பாளர்கள்முகநூல்

சினிமா நட்சத்திரம் கங்கணா ரணாவத், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ராமாயணம் சீரியலில் ராமராக நடித்த அருண் கோவில், சீதா சொரேன் மற்றும் தொழிலதிபர் நவீன் ஜின்டல் உள்ளிட்டோரை பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தல் வேட்பாளரக அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கான 111 வேட்பாளர்கள் கொண்ட தனது ஐந்தாவது மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு பாஜக அறிவித்தது.

கங்கணா ரணாவத்

கங்கணா ரணவத்
கங்கணா ரணவத்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கங்கணா ரணாவத். இவர் தமிழில் சந்திரமுகி 2, தாம் தூம் போன்ற படங்களிலும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள கங்கணா, பாஜக ஆதரவாளராக இருந்துவந்தார். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அங்கேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிரண் குமார் ரெட்டி

கிரண் குமார் ரெட்டி
கிரண் குமார் ரெட்டி

ஆந்திர பிரதேசத்தில் பாஜக சார்பாக முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி ராஜம்பேட் தொகுதியில் களமிறங்குகிறார். கே கீதா மற்றும் சிஎம் ரமேஷ் ஆகியோர் பாஜக ஆந்திர பிரதேச மாநில மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். திருப்பதி தொகுதியில் வரப்பிரசாத ராவ் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

மேனகா காந்தி, சீரியலில் ராமராக நடித்த அருண்

பிரபல ராமாயணம் சீரியலில் ராமராக நடித்த அருண் கோவில் பாஜக சார்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் தொகுதியில் களமிறங்குகிறார்.

மேனகா காந்தி
மேனகா காந்தி

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ராகுல் காந்தியின் சித்தியான மேனகா காந்திக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என பேசப்பட்ட நிலையில், அவர் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

அதுல் கர்கு

காஜியபாத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் ராணுவ தளபதி வி கே சிங் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் அதுல் கர்கு போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

ஜெகதீஷ் ஷெட்டர்

ஜெகதீஷ் ஷெட்டர்
ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக மாநிலம் பெல்காம் தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவின் மக்களவை வேட்பாளராக களம் இறங்குகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற ஷெட்டர் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய நிலையில் அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சீதா சொரன்

சீதா சொரன்
சீதா சொரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த சீதா சொரன் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என பாஜக தெரிவித்துள்ளது. தும்கா தொகுதியில் போட்டியிடும் சீதா சொரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் மூத்த தலைவரான சிபு சொரன் மருமகள் என்பதும் தற்போது சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சொரனின் சகோதரரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுரேந்திரன், ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகுமார்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து சுரேந்திரன் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. எர்ணாகுளம் தொகுதியில் கே எஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் கொல்லம் தொகுதியில் கிருஷ்ணகுமார் போட்டியிடுவார்கள் என பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

ஒரிசா மாநிலத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் களம் இறக்கப்பட்டுள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவர் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக தெரிவித்துள்ளது. ஒரிசா மாநிலத்திறகான பாஜக மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதிலிருந்து அந்தக் கட்சி பிஜு ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்காது என்பது தெளிவாகிறது. பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா உள்ளிட்டோருக்கும் ஒரிசா மாநிலத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் நவீன் ஜின்டல்

தொழிலதிபர் நவீன் ஜின்டல்
தொழிலதிபர் நவீன் ஜின்டல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்த தொழிலதிபர் நவீன் ஜின்டல் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கட்சியின் மாநில தலைவரான திலீப் கோஷ் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

பீகார் - பல நட்சத்திர வேட்பாளர்கள்

பீகார் மாநிலத்தில் பல நட்சத்திர வேட்பாளர்கள் அடங்கிய மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், ராஜ் குமார் சிங் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் பாஜக சார்பாக பீகார் மாநிலத்தில் போட்டியிடுகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் ராதா மோகன் சிங் ஆகியோரும் பீகார் மாநிலத்தில் களம் காண்கின்றனர்.

நட்சத்திர வேட்பாளர்கள்
ELECTION BREAKING: BJPயில் இணைந்த EX Cong MPக்கு உடனே சீட் To பாஜகவில் கங்கனா வேட்பாளராக அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஆந்திரப்பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் பாஜகவின் ஐந்தாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். குஜராத், மிசோரம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களும் இந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ள நிலையில், பண்டிகைக்கு பிறகு பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் தங்களுடைய பிரசாரத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com