SIR சர்ச்சை| விளக்கம் கோரும் பாஜக கூட்டணி கட்சிகள்.. அடுத்த கட்டத்திற்கு நகரும் பிரச்னை!
எஸ்ஐஆர் சர்ச்சை காரணமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பாஜக வெற்றிக்காக நடந்த வாக்குத் திருட்டு என ராகுல், மம்தா, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் குற்றம்சாட்டுகின்றனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் மறுதேர்தல் கோரிக்கை எழ, கரப்பான் ஜனதா கட்சி தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரிப் போராட்டம் அறிவித்துள்ளது. இதேவேளை, பாஜக கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் குறித்து தெளிவான விளக்கம் கோருகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது பாஜகவின் வெற்றிக்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய வாக்குத் திருட்டு என்று ராகுல் காந்தி தொடங்கி மம்தா பானர்ஜி வரை குற்றம்சாட்டிவருகிறார்கள். உத்தவ் தாக்கரே ஒரு படி மேலே போய், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி, கரப்பான் ஜனதா கட்சி போராட்டம் அறிவித்திருக்கிறது.
இது ஒரு புறமிருக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளும் எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. தேர்தல் செயல்முறை குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உரிய விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியிருக்கிறார்.
தேர்தல் குறித்து மக்கள் சந்தேகிக்கத் தொடங்குவது கவலைக்குரியது என்றும், விளக்கம் ராகுல் காந்திக்காக அல்ல; பொதுமக்களுக்காக இருக்க வேண்டும் என்றும் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் எஸ்ஐஆர் தொடர்பான கேள்விகள் மற்றும் கவலைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கேள்விகள் எழும்போது உரிய விளக்கம் அளிப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்கிறார் தெலுங்கு தேசம் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் லாவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலு. எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதி முடிவு ஏக மனதாகவே எடுக்கப்பட்டது என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், பாஜகவில் தலையீடு குறித்தும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறிவைத்து வாக்குகள் நீக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கவில்லை.
