14 year old boy bitten by snake in up
14 year old boy bitten by snake in upweb

மூடநம்பிக்கையின் உச்சம்.. பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த பெற்றோர்.. உபியில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், 14 வயது சிறுவனைப் பாம்பு கடித்த நிலையில், அவனது குடும்பத்தினர் அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், ஒரு மாந்திரீகரிடம் அழைத்துச் சென்றதால் சிறுவன் உயிரிழந்தான்.
Published on
Summary

உத்தரப் பிரதேசம் அம்ரோஹாவில், வயலில் வேலை செய்த 14 வயது சுர்ஜித்தை நச்சுப் பாம்பு கடித்தது. மாந்திரீகரின் ஆலோசனையின்படி கங்கை ஆற்றில் ஏழு மணி நேரம் மூழ்கடித்தனர். எந்த முன்னேற்றமும் இல்லாமல் இறுதியில் சிறுவன் அடக்கம் செய்யப்பட்ட இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் கொடூர விளைவாக கண்டிக்கப்படுகிறது.

பாம்பு கடித்த 14 வயது சிறுவனை, மாந்திரீகரின் பேச்சை கேட்டு அவனது பெற்றோர் மூடநம்பிக்கையால் கங்கை ஆற்றில் 7 மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு
பாம்புGoogle

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டம் பீதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சுர்ஜித். தனது வயலில் வைக்கோல் சேகரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நச்சுப் பாம்பு அவனைத் தீண்டியது. பாம்பு கடித்தவுடன் சுர்ஜித்தின் உடல்நிலை மோசமடைந்தது. அவனை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், மருத்துவர்களின் பேச்சை நம்ப மறுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஒரு மாந்திரீகரின் ஆலோசனையைக் கேட்டுள்ளனர்.

அந்த மாந்திரீகர், "சிறுவனை கங்கை ஆற்றில் மூழ்க வைத்தால் விஷம் இறங்கி உயிர் பிழைப்பான்" என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர், சுர்ஜித்தின் உடலை மூங்கில் கம்புகளின் உதவியுடன் கங்கை ஆற்றின் புனித நீரில் சுமார் 7 மணி நேரம் வரை மூழ்க வைத்தனர். சிறுவனின் மூக்கு மட்டும் தண்ணீருக்கு வெளியே இருக்கும்படி அவர்கள் வைத்திருந்தனர்.

நீண்ட நேரம் ஆற்றில் வைத்திருந்தும் சிறுவனின் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் பின்னரே, அவன் இறந்துவிட்டதை உணர்ந்த பெற்றோர் அவனது உடலை அடக்கம் செய்தனர்.

நவீன மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இக்காலத்திலும், இது போன்ற மூடநம்பிக்கைகளால் ஒரு சிலர் செய்யும் காரியம் பார்ப்போரை சங்கடத்தில் ஆழ்த்துகிறது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்தால் காலம் கடத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று 'ஆன்டி-வெனம்' ஊசி செலுத்திக் கொள்வதே உயிரைக் காப்பாற்ற ஒரே வழி என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com