முன்னாள் பேராயர் ஃபிராங்கோவின் காவல் நீட்டிப்பு
பாலியல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பேராயர் ஃபிராங்கோவை வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் கத்தோலிக்க திருச்சபையின் பேராயராக இருந்த ஃபிராங்கோ, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும்போது ஃபிராங்கோவை பதவி நீக்கம் செய்து கத்தோலிக்க திருச்சபையின் வாடிக்கன் தலைமையகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவரிடம் தொடர்ந்து மூன்று நாள்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் கடந்த 22-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். பினனர் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி ஃபிராங்கோவின் ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் அவருடைய நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் ஃபிராங்கோவின் நீதிமன்ற காவலை வரும் 20-ஆம் தேதி வரை நீட்டித்து கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.