அனைத்து நதிநீருக்கும் ஒரே தீர்ப்பாயம் : சரிப்படுமா புதிய மசோதா ?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே தீர்ப்பாயத்தின் மூலம் நதிநீர் பங்கீடு செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்த ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதனால் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரங்களுக்கு ஏற்றதுபோல இந்தியாவின் அரசியல் சட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி இப்படி பல திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் ஒரே தீர்ப்பாயம் என்ற புதிய சட்டத்திருத்தையும் கொண்டு மத்திய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் திமுகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று மக்களவை தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவு பெற்றது. இந்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டே மாநிலங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டதாகவும், 2017ஆம் ஆண்டே இந்து மக்களவை நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறினார். அதனால் தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி தற்போது மாநிலங்கள் வாரியாக தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும் மசோதாக்கள் மூலம் தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு மேல் காலம் ஆகுவதாகவும், புதிய சட்ட திருத்த மசோதாவின் மூலம் 2 ஆண்டுகளில் நதிநீர் பங்கீட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.