\
பைக் டாக்ஸி
பைக் டாக்ஸிfile photo

’பைக் டாக்ஸி 8 கோடி பேருக்கான வாழ்வாதாரம்..’ மாநில அரசுகளுக்கு அமைச்சர் கட்கரி கோரிக்கை!

பைக் டாக்ஸி 8 கோடி பேருக்கான வாழ்வாதாரம் என்றும் மாநில அரசுகள் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கட்கரி கூறியுள்ளார்.
Published on
Summary

பைக் டாக்ஸி சேவையால் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமுறைகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சில மாநிலங்கள் இன்னும் அனுமதி மறுப்பதாகவும், விதிமுறை மீறுபவர்களுக்கு எதிர்மறை புள்ளிகள் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் சாலைகள் விரிவாக்கம், இட நெருக்கடி, வாகனங்கள் பெருக்கம் உள்ளிட்டவற்றால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மறுபுறம் விலைவாசியும் உயர்ந்துள்ளதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கவும், போக்குவரத்து டிராஃபிக், பயணத்தில் ஏற்படும் கூட்டநெரிசல் உள்ளிட்டவற்றை சமாளிக்க அதிகளவிளான மக்கள் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து பைக் டாக்ஸியை தேர்வு செய்கின்றனர். இது உடனடியாக அணுகவும், நினைத்த நேரத்திற்கு விரைவில் செல்லவும் முடியும் என்பதால் சாமான்ய மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பைக்-டாக்ஸி பிடித்துள்ளது.

பைக் டாக்ஸி தடையால் உயர்ந்த ஆட்டோ கட்டணம்
பைக் டாக்ஸி தடையால் உயர்ந்த ஆட்டோ கட்டணம்web

இந்தசூழலில் பைக் டாக்ஸியில் சொந்த பைக்குகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்றும், அதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று ஆட்டோ, கார் டாக்ஸி ஓட்டுநர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல அரசு தரப்பில் பைக்-டாக்ஸி சார்ந்து எந்தவித சட்ட விதிமுறைகளும் விதிக்கப்படாததால் தலைகவசம் அணியாதது, பாலியல் தொல்லை, பயணிகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி போன்ற பிரச்னைகளும் பெரிதாக எழுந்துள்ளன.

கர்நாடகாவில் பைக் டாக்ஸியில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதால், அம்மாநிலத்தில் அதற்கான அனுமதி இன்னும் பிரச்னை ஒன்றாக மாறியுள்ளது. அதேபோல முறையான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை பைக்-டாக்ஸி ஓட்டுவது குற்றம் என தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பைக்-டாக்ஸியை மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கட்கரி கோரிக்கையாக வைத்துள்ளார்.

பைக் டாக்ஸிக்கு தடை
பைக் டாக்ஸிக்கு தடைweb

இதுகுறித்து பேசியிருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பைக் டாக்ஸிகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் அனுமதி தரவேண்டும். இதன் அனுமதி 8 கோடி பேருக்கு வாழ்வாதாரமாக அமையும். பைக் டாக்ஸிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் போக்குவரத்து என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்று பல மாநிலங்கள் பைக் டாக்ஸிகளை இயக்க ஒப்புதல் தரவில்லை. போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும், இதில் தவறு செய்யும் ஓட்டுநர்களுக்கு எதிர்மறை புள்ளிகள் வழங்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com