ஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்!
உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வாகன விதிகளை மீறும் போலீசாரை வழிமறித்து வழக்கறிஞர்கள் டயர்களை பஞ்சர் ஆக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சில நாட்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் தலைக்கவசம் அணியாத வழக்கறிஞரை போலீசார் ஒருவர் வழிமறித்து அபராதம் விதித்துள்ளார். இது போலீசாருக்கும், அந்த வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை, பிஜ்னோர் நீதிமன்ற வளாகத்துக்குள் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய காவலர்களை வழிமறித்த வழக்கறிஞர்கள் சாவிகளை பிடுங்கியும், டயர்களை பஞ்சரும் ஆக்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்பி, நீதிமன்ற வளாகத்துக்குள் காவலர்களிடம் வழக்கறிஞர்கள் அத்துமீறி நடந்த விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. வழக்கறிஞர்கள் நீதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது. காவலர்கள் யாராவது அநாகரிகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அம்மாவட்ட பார் கவுன்சில் இயக்குநர், வாகனங்களை வழிமறித்து சோதனை செய்ய போக்குவரத்து காவலர்களுக்கும், போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெளிவான அறிவிப்பை கொடுத்துள்ளார். ஆனால் குற்றப்பிரிவு காவலர்கள் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர்.
பல காவல்துறை அதிகாரிகளே தலைக்கவசம் அணிவதில்லை. வாகன ஆவணங்களை சரியாக வைத்திருப்பதில்லை. நாங்கள் அவர்களின் வாகன டயர்களை பஞ்சர் ஆக்கினோம். சாவிகளை பிடுங்கி வைத்துகொண்டு சாலை விதிகளை கடைபிடிக்க கோரிக்கை விடுத்தோம். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் வாகன சாவி அவரவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார்.