பிஎஃப்ஐ-யும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றா? காவல் உயரதிகாரி கருத்தால் சர்ச்சை

பிஎஃப்ஐ-யும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றா? காவல் உயரதிகாரி கருத்தால் சர்ச்சை
பிஎஃப்ஐ-யும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றா? காவல் உயரதிகாரி கருத்தால் சர்ச்சை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவையும் (பிஎஃப்ஐ), ஆர்எஸ்எஸ் அமைப்பையும் ஒப்பிட்டு காவல் உயரதிகாரி கருத்து தெரிவித்தது பிகாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார். இதனை முன்னிட்டு அங்கு போலீஸார் சென்ற வாரம் தீவிர வாகனச் சோதனையிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கும், பிஃஎப்ஐ அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது அசம்பாவிதச் சம்பவத்தில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டதாக தகவல்கள் பரவி வந்ததால் பதற்றமான சூழல் உருவானது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பாட்னா எஸ்எஸ்பி மனவ்ஜீத் சிங் தில்லான் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர், "பிஎஃப்ஐ அமைப்புடன் தீவிரவாதிகள் சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், இவர்களின் கைதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சமூக வலைதளங்களில் பிஎஃப்ஐ செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் காரணமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக அவர்கள் தகவல்களை பரப்பி வந்தது கண்டறியப்பட்டது" என்றார்.

இந்தப் பேட்டியின் போது பிஎஃப்ஐ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த எஸ்எஸ்பி மனவ்ஜீத் சிங், "பிஎஃப்ஐ அமைப்பு உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்களை தங்கள் மையத்துக்கு அழைத்து மூளைச்சலவை செய்கிறது. இதைதான் ஆர்எஸ்எஸ் அமைப்பும் செய்கிறது. ஆர்எஸ்எஸ் பயிற்சிகளிலும் லத்திகள் பயன்படுத்தப்படுகின்றன" எனக் கூறினார்.

சர்ச்சை

எஸ்எஸ்பி மனவ்ஜீத் சிங்கின் இந்தக் கருத்து பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனவ்ஜீத் சிங்குக்கு பாஜக தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிகார் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சுஷில் குமார் மோடி கூறுகையில், "தனது கருத்துக்காக பாட்னா எஸ்எஸ்பி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்குர் தனது ட்விட்டர் பதிவில், "எஸ்எஸ்பி மனவ்ஜீத் சிங் தனது மன சமநிலையை இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. தேசிய இயக்கமான ஆர்எஸ்எஸ்-ஐ பிஎஃப்ஐ அமைப்புடன் எப்படி ஒப்பிட முடிகிறது?

விளக்கம் கேட்பு

எஸ்எஸ்பி மனவ்ஜீத் சிங்குக்கு பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்ததால், அவரது கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு தீவிர இஸ்லாமிய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com