2016-ம் ஆண்டிலேயே விற்பனைக்குத் தடை... ஆனால், பீகாரில்தான் குடிப்பழக்கம் அதிகம்!
மதுபான விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆண்கள்தான் அதிக அளவில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் இந்திய நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) விவரங்களை வெளியிட்டார். முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கணக்கெடுப்பில் 17 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் விவரங்கள் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் வெளியிடப்பட உள்ளது.
மதுபான விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆண்கள்தான் அதிக அளவில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் கடந்த 2016-இல் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சுமார் 15.5 சதவிகிதம் பேர் குடி பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அதில் நகரப்பகுதியை சேர்ந்தவர்கள் 14 சதவிகிதமாகவும், கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் 15.8 சதவிகிதமாகவும் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிராவை சேர்ந்த 13.9 சதவிகித ஆண்கள் குடி பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த பெண்களில் 16.2 சதவிகிதம் பேர் குடி பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில் குஜராத் (5.8) மற்றும் ஜம்மு - காஷ்மீரில் (8.85) சதவிகிதம் பேர் மட்டுமே குடிப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுதான் இப்போதைக்கு நாட்டிலேயே குறைந்த அளவிலான மது பிரியர்களை கொண்ட மாநிலமாக உள்ளது.