வெண்ணிலா கபடி குழு 'பரோட்டா சூரி' பாணி: போட்டிக்காக 150 மோமோக்களை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்!

பீகாரில் போட்டிக்காக, அதிக மோமோக்களைச் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோமோ, பீகார் இளைஞர்
மோமோ, பீகார் இளைஞர்twitter

’வெண்ணிலா கபடி குழு’ முதல் பாகம் படத்தில் நடிகர் சூரி, தன் நண்பர்களுடன் பரோட்டா சாப்பிடும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியில், ’ஒருவர் 50 பரோட்டா சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால், பரோட்டாவுக்கு காசு தர வேண்டாம். மேலும் யார் ஒருவர் சாப்பிடுகிறாரோ அவருக்கு ரூ.100 வழங்கப்படும்’ என சப்ளையர் சொல்வார். இந்தப் போட்டியில், சூரி 50 புரோட்டா சாப்பிடுவார்.

ஆனால், சப்ளையர் ’இன்னும் 50 பரோட்டா சாப்பிடவில்லை’ என்று கூற, இதில், சூரி தான் மறுபடியும் 50 பரோட்டா சாப்பிடுவதாகக் கூறுவார். சப்ளையர் ஆச்சர்யத்தில் பெருமூச்சு விட, அத்துடன் அந்த காட்சி முடிவடையும். இதேபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது. ஆனால், அங்கு பரோட்டாவுக்குப் பதில் மோமோ சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் சிஹோர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் விபின். இவர், மொபைல் போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், அவரது நண்பர்கள், விபினை மோமோ (பீகாரின் பிரபல உணவு மோமோ) சாப்பிட அழைத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மூவரும் மோமோ சாப்பிட ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களுக்கிடையே யார் அதிகபட்ச மோமோக்கள் சாப்பிடுகிறார்கள் எனப் போட்டி வைத்து உள்ளனர். அதற்காக நண்பர்களுக்குள் 1,000 ரூபாய் பந்தயமும் கட்டப்பட்டுள்ளது.

momo
momotwitter

இதையடுத்து, விபின் நண்பர்களின் சவாலை ஒப்புக்கொண்டு ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமான மோமோக்களைச் சாப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட அவர், 150 மோமோக்களைச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. சாப்பிட்ட அவர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உள்ளார். உடனே நண்பர்கள் பதறி அவசரமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிறகு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபினின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர், “வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்' எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விபினின் தந்தை, தனது மகனின் நண்பர்கள் அவரை கொலை செய்ய சதி செய்துள்ளனர். மேலும், தனது மகனிடம் அவருடைய நண்பர்கள் வேண்டுமென்றே சவால்விட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இதுவரை விபினின் குடும்பத்தின் சார்பில் எந்த புகாரும் காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com