லாலுவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறிக்கக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், கட்சித் தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் மாபெரும் வெற்றி பெற்றதால், பீகாரில் மெகா கூட்டணி அமைத்து மூன்று கட்சியினரும் ஆட்சி அமைத்தனர். அண்மையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா ஜளம் வெளியேறியது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பீகார் காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் 19 பேரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை உடனடியாக முறிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். காரணம் லாலு பிரசாத் காங்கிரஸுக்கு உண்மையாக நடக்கவில்லை என்றும், கூட்டணிக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சியை நாடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். பீகாரில் உள்ள 27 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 19 பேர் லாலுவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பதால் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அது நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.