”என் கிட்னியை எடுத்த அந்த டாக்டர் கிட்னிதான் வேணும்” - பீகார் பெண் காட்டம்.. நடந்தது என்ன?

”என் கிட்னியை எடுத்த அந்த டாக்டர் கிட்னிதான் வேணும்” - பீகார் பெண் காட்டம்.. நடந்தது என்ன?
”என் கிட்னியை எடுத்த அந்த டாக்டர் கிட்னிதான் வேணும்” - பீகார் பெண் காட்டம்.. நடந்தது என்ன?

கருப்பை தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர் ஒருவர் திருடிய அதிர்ச்சிகர சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. கிட்னிகளை திருடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தினமும் டையாலிசிஸ் சிகிச்சை கொடுத்தாலும் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்.

பீகாரின் முஸாஃபர்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி என்ற 38 வயதான பெண். தனக்கு வயிற்று வலி இருக்கிறது என பரியாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவரது கர்ப்பப்பையில் தொற்று இருப்பதால் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி கடந்த செப்டம்பர் 3ம் தேதி அனுமதித்திருக்கிறார்கள்.

வலியால் துடித்த சுனிதா.. சோதனையில் அதிர்ச்சி!

அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய சுனிதாவிற்கு வயிற்று வலி அதிகமானதோடு, அவரது உடல் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டதால் முஸாஃபர்புரில் உள்ள அரசின் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் (SKMCH) சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுனிதாவின் உடலில் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டிருப்பது தெரிய வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இதுபோக, சிறுநீரகம் இரண்டும் இல்லாததால் சுனிதா தேவி உயிரோடு இருப்பதே கடினமாக இருக்கும் என கூறப்பட்டதால் அவரது குடும்பத்தினர் மேலும் அதிர்ந்துப்போயிருக்கிறார்கள். ஆகையால் அந்த அரசு மருத்துவமனையிலேயே சுனிதாவுக்கு தினமும் டையாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பேசியுள்ள SKMC மருத்துவமனையின் மருத்துவர் பி.எஸ்.ஜா, “பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்ட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு (IGIMS) சிகிச்சைக்காக அனுப்பி வைத்த பிறகு மீண்டும் இங்கே அனுப்பி வைக்கப்பட்டார். இரு கிட்னிகளும் இல்லாததால் ஒரு நாள் டையாலிசிஸ் கொடுக்க தவறினாலும் சுனிதாவால் உயிர் பிழைக்க முடியாது” எனக் கூறியிருக்கிறார்.

தலைமறைவான மருத்துவர்!

இதனையடுத்து சுனிதா தேவியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரை தொடர்ந்து பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததுமே கிட்னிகளை திருடிய சுபகந்த் க்ளினிக்கின் உரிமையாளர் பவன் குமார் மற்றும் சர்ஜரி செய்த மருத்துவர் ஆர்.கே.சிங் இருவரும் தலைமறைவானதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். மேலும், அவர்களின் மருத்துவர் க்ளினிக்கை சட்டப்படி பதிவு செய்யவில்லை என்றும், அந்த ஆர்.கே.சிங்கின் மருத்துவ படிப்பு சான்றிதழும் போலியானது என போலீசார் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

இதனிடையே சுனிதா தேவியின் உடல்நிலை குறித்து பேசியுள்ள IGIMS-ன் சிறுநீரகவியல் துறையின் தலைவர் மருத்துவர் ஓம் குமார், “தினமும் டையாலிசிஸ் சிகிச்சை செய்தாலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சுனிதாவால் பிழைக்க முடியும்.” எனக் கூறியிருக்கிறார். ஆகையால் சுனிதா தரப்பில் இருந்து கிட்னி தானம் கேட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

”என் கிட்னியை எடுத்த மருத்துவரின் கிட்னிதான் வேண்டும்”

இந்த நிலையில், தனது கிட்னிகளை திருடிய டாக்டரை உடனடியாக கைது செய்வதோடு, அந்த டாக்டரின் சிறுநீரகத்தையே எனக்கு கொடுக்க வேண்டும் என சுனிதா தேவி போலீசாரிடம் வற்புறுத்தியுள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான சுனிதா தேவியின் கணவர் கூலி தொழில் செய்வதால் தன்னுடைய குழந்தைகளை கவனித்துக்கொள்ள தன் உயிரோடு இருந்துதான் ஆகவேண்டும் எனவும் சுனிதா கூறியிருக்கிறார். வயிற்று வலி என சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் இருந்து இரண்டு சிறுநீரகங்களையும் திருடிய சம்பவம் பீகார் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியிருக்கிறது.

மனித உரிமை ஆணையர் நோட்டீஸ்

பெண்ணின் அனுமதியில்லாமல், அவருக்கே தெரியாமல் அவரது இரு கிட்னிகளையும் திருடிய இந்த விவாகரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டு மாநில சுகாதாரத் துறை விளக்கம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு நோட்டீஸ் விடுத்துள்ளது. இந்நிலையில், சுனிதாவின் கிட்னியை திருடிய அங்கீகாரமில்லாத அந்த மருத்துவமனையின் உரிமையாளர் நேற்று (நவ.,16) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com