வழுக்கை தலையை மறைத்து ’விக்’ வைத்த மாப்பிள்ளை.. தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார்! சுவாரஸ்ய பின்னணி!

வழுக்கைத் தலையை மறைத்து, ’விக்’ வைத்து திருமணம் செய்ய முயன்ற இளைஞரை, மணமகள் உறவினர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாப்பிள்ளை
பீகார் மாப்பிள்ளைtwitter

குறிப்பிட்ட வயதிற்கு முன்பாகவே தலையில் முடி கொட்டிவிடுவது இயல்பான ஒன்றுதான். ஆனா, சமுதாயத்தில் சில நேரங்களில் அது கேலிக்கு உள்ளாக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் பெண் பார்க்கும் தருணங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால், விக் பயன்படுத்தும் பழக்கம் தற்காலத்தில் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் அதனை நேர்மையாக சொல்லிவிடுகிறார்கள். ஆனால், சில நேரங்களில் சொல்லாமல் மறைத்து திருமணத்தை முடிக்கிறார்கள். அது சில நேரங்களில் கலாட்டாவில் முடிந்துவிடுகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் கயா மாவட்டம் இக்பால்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள டோபி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது மணமக்கள் மேடைக்கு வந்தனர். விழாவின்போது மணமகன் பாரம்பரிய வழக்கப்படி, 'செஹ்ரா' என்ற தலையை மறைக்கும் கவசம் அணிவது வழக்கம். அதன்படி தலைக்கவசம் அணிய முயன்றபோது அவர் ’விக்’ வைத்து மறைத்து திருமணம் செய்ய முயன்றது தெரிய வந்தது. அதாவது வழுக்கைத் தலையுடன் இருந்த மணமகன் அதனை ’விக்’ வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார்.

இதைக் கண்ட மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் தம்மை ஏமாற்றியதாகக் கூறி மணமகனை மணமேடையிலேயே சரமாரியாகத் தாக்கினர். அப்போது மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார். ஆனாலும் மணமகள் குடும்பத்தினர் தொடர்ந்து அவரைத் தாக்கினர். மேலும் அந்த மணமகன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணமகளின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை சரமாரியாகத் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வழுக்கை என்பதை இயல்பான ஒன்றாக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்வது என்பதே இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். அதேபோல், சொல்லாமல் ஒரு பெண்ணை ஏமாற்ற நினைப்பதும் குற்றமான செயல்தானே தவிர அதனை நியாயப்படுத்த முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com