பீகாரில் புதுமை | பயன்பாட்டு நேரத்திற்கேற்ப மின் கட்டணம் நிர்ணயம்!
நேரத்தின் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இதன்படி, ஒருநாளின் 24 மணி நேரம் 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை தேவை குறைவான நேரம் என்றும் மாலை 5 முதல் இரவு 11 மணி வரை தேவை மிகுந்த நேரம் என்றும் இரவு 11 முதல் காலை 5 வரை சாதாரண நேரம் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மின் கட்டணம் தேவை மிகுந்த நேரத்திற்கு 8 ரூபாய் 16 காசாகவும், தேவை குறைந்த நேரத்திற்கு 5 ரூபாய் 94 காசாகவும் சாதாரண நேரத்தில் 7 ரூபாய் 42 காசாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார தேவையில் சமநிலையைக் கொண்டுவர சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை தங்கள் மாநிலத்திலும் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது. மின்விசிறிகள், குளிரூட்டிகள் மற்றும் விளக்குகள் போன்ற சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், வழக்கமாக மாலை நேரங்களில் தேவை கடுமையாக உயர்கிறது என்றும், இதன் காரணமாக இந்தக் காலகட்டத்தில் அதிக கட்டணங்கள் விதிக்க வேண்டியுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

