பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு: விவரங்களை வெளியிட்டது மாநில அரசு!

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பீகாரில் உள்ள நிதிஷ் குமார் அரசு, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு
பீகார் சாதிவாரி கணக்கெடுப்புட்விட்டர்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்புட்விட்டர்

இந்த நிலையில், பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன்முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை இன்று (அக்.2) வெளியிட்டுள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிய வந்துள்ளது.

அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (BC) : 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.12%) எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) : 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.01%) எனவும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்(SC): 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.65 %) எனவும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST): 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.68 %) எனவும், பொதுப் பிரிவினர் (GC): 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.52 %) எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல்/ பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் வழியாக நாட்டின் வளர்ச்சிக்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கண்டிப்பாகத் தேவை என்று பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரம் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால், அதனை மத்திய அரசுதான் செய்ய முடியும். மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாத சூழல் இருந்தது. எனினும், ’மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தொகையை தவிர, மற்ற சாதிகளின் மக்கள்தொகையை கணக்கெடுக்க முடியாது’ என மத்திய அரசு கடந்த ஆண்டு தெளிவுப்படுத்திவிட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்புட்விட்டர்

இதனால் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தற்போதைய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் முட்டுக்கட்டைகள் எழுந்தபோதிலும், ’சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் என்றும், தாங்கள் சாதிவாரி ஆய்வுதான் செய்கிறோம்’ எனவும் பீகார் அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று, சாதிவாரியான கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com