ஒரே குடையின் கீழ் திரளும் எதிர்க்கட்சிகள்..திருப்புமுனையை உருவாக்குமா ஜூன் 23ம் தேதி கூட்டம்?

ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் முக்கிய திருப்புமுனையாக அமையும் எனச் சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள்
எதிர்க்கட்சித் தலைவர்கள்twitter

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த வருடத்துடன் 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, இடையில் நடைபெற்ற சில மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பாஜக அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதையடுத்து தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக அரசு தோல்வியுற்று, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

இது, பாஜக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. தவிர மணிப்பூர் கலவரம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், செங்கோல் விவகாரம், 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பிரச்னைகளும் ஆளும் மத்திய அரசுக்கு தலைவலியை உண்டாக்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தப் பணியை சீரியஸாய்ச் செய்துவரும் நிதிஷ்குமார், இதற்காக பல்வேறு மாநில முதல்வர்களையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

நிதிஷ்குமாரின் முன்னெடுப்பிற்கு பெருவாரியான எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வரும் 12ஆம் தேதி பாட்னாவில் எதிரகட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்திருந்தது. ஆனால் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அன்றைய தினம் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, வரும் 18 ஆம் தேதி நாடு திரும்புவதால் அவரும் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, எதிர்க் கட்சித் தலைவர்களின் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலன் சிங் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இக்கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்ப்பாரா என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வரவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் மிகவும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இதில் கலந்துகொள்ளும் தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை உறுதி செய்வதே இந்த கூட்டத்தின் முக்கிய இலக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆக, இந்த கூட்டம் பாஜகவுக்கு எந்த அளவுக்கு நெருக்கடியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார். அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com