கூட்டணியிலிருந்து விலகுகிறாரா நிதிஷ் குமார்? பாட்னாவில் பரபரக்கும் அரசியல்!

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவி வருவதால், பிஹார் மாநில அரசியல் மற்றும் தேசிய அரசியலில் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்புதிய தலைமுறை

டெல்லி செய்தியாளர் கணபதி சுப்ரமணியம்

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவி வருவதால், பிஹார் மாநில அரசியல் மற்றும் தேசிய அரசியலில் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிஹார் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுடன் நிதிஷ் குமார் தொடர் ஆலோசனை நடத்தி வருவதை மாநில அரசியல் தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதே சமயத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் தங்கள் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

I-N-D-I-A கூட்டணி
I-N-D-I-A கூட்டணிட்விட்டர்

நிதிஷ் குமார் I-N-D-I-A கூட்டணியிலிருந்து விலகிவிடுவார் எனவும் அவர் மீண்டும் பாரதிய ஜனதா தளம் கட்சி பக்கம் தாவலாம் எனவும் பிஹார் மாநில அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே பலமுறை ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணிகளில் மாறி மாறி இணைந்து முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் I-N-D-I-A கூட்டணி தலைவர்கள் தனக்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்து நிதிஷ் குமார் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் திரைக்குப்பின் பாஜக புள்ளிகளுடன் தொடர்பில் உள்ளதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை வாய்ப்பாக கருதி பாஜக தலைவர்களும் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர். மறைந்த முன்னாள் பீகார் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மாநில அரசியலில் புதிய திருப்பத்திற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த முடிவை நிதிஷ் குமார் வரவேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு பக்கம் பாரத ரத்னா விருது மூலமாக நிதிஷ் குமாரை பாஜக தங்கள் பக்கம் இருக்க முயற்சிக்கும் அதே நேரத்தில், பல ஐக்கிய ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கருதப்படுகிறது. இந்த வருட மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமர் பதவியை தக்கவைப்பார் என கருதப்படுவதால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட பல பிஹார் அரசியல் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அதே சமயத்தில் I-N-D-I-A கூட்டணியில் பல்வேறு விரிசல்கள் உண்டாகியுள்ளது, பிஹார் அரசியல் திருப்பங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம் பலமுறை விருப்பம் தெரிவித்தபோதிலும், நிதிஷ் குமார் I-N-D-I-A கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் முயற்சி செய்யவில்லை என ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்கள் வருத்தத்துடன் உள்ளனர். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிகூட நிதிஷ் குமாருக்கு அளிக்கப்படவில்லை என்பது அவர்களின் புகாராக உள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவாக நடைபெற வேண்டும் என நிதிஷ் குமார் கூறியதை இதுவரை I-N-D-I-A கூட்டணி செயல்படுத்தவில்லை. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்ந்து காங்கிரஸ் மோதலில் ஈடுபட்டு வருவதால், தொகுதிப் பங்கீடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பல்வேறு அதிருப்திகள் காரணமாக நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணியில் இருந்து விலகுவார் என பரபரப்பாக பேசப்படும் நிலையில் பாட்டா நகரில் தொடர் அரசியல் ஆலோசனைகள் அரங்கேறி வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com