பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாட்னாவில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை நேரில் சந்தித்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கடந்த தேர்தலில் ஆட்சியமைத்தார். துணை முதலமைச்சராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி மீதான ஊழல் புகார் பிரச்னையால் மகாபந்தன் எனப்படும் மெகா கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஊழல் புகாரில் தேஜஸ்வி பதவி விலகமாட்டார் என்றும், நிதிஷ்குமாரை, தாமே முதலமைச்சராக்கியதாகவும் லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார். இந்தநிலையில், நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் கட்சியின் பலம் 71ஆக இருக்கிறது. தேஜஸ்வி பிரச்னையில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நிதிஷ்க்கு ஆதரவை வாபஸ் பெற்றாலும் தாங்கள் ஆதரவளிப்போம் என பாஜக கூறியிருந்தது. நிதிஷ்குமார் தனது அமைச்சரவையில் இருந்து தேஜஸ்வியை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.