பாட்னா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு
பாட்னா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
காணாமல் போனவர்களை தேடுதல் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இத்தொகையை வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, நேற்று மாலை, பீகார் மாநிலம் பாட்னாவில், கங்கை நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மகர சங்கராந்தியை ஒட்டி, 40க்கும் மேற்பட்டோர் பயணித்த தலா இரண்டு படகுகள் கங்கை நதியில் சென்று கொண்டிருந்தன. அப்போது, ஒரு படகில் சென்று கொண்டிருந்தவர் மற்றொரு படகுக்கு மாற முற்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. படகு கவிழும் காட்சிகளும், அதில் இருந்தவர்கள் நீரில் தத்தளிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.