பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கூறி, மாணவர்கள் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி, பீகார் மாநிலம் கயாவில் அத்தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிக்கு தேர்வர்கள் தீ வைத்தனர். அப்போது ரயில் பெட்டியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறிய காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜெகனாபாத்தில் உள்ள காவல்நிலையத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கு பிரதமர் மோடியின் உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள் தீ வைத்து எரித்தனர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாட்னா மாவட்ட மூத்த காவல்கண்காணிப்பாளர் மாணவ்ஜித் சிங் தில்லன் தெரிவிக்கையில், “இந்த சம்பவத்தில் 6 போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் மீதும், அடையாளம் தெரியாத 150 பேரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ரயில்வே என்.டி.பி.சி (NTPC - Non-Technical Popular Categories) தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கும் தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது கட்ட தேர்வு என்பது ஏமாற்று வேலை எனக் குற்றம் சாட்டியுள்ள தேர்வர்கள், 2019-ம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்ட தேர்வு எனக் குறிப்பிடவில்லை எனவும் தங்களின் எதிர்காலத்தோடு அரசு விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ரயில்வே தேர்வு வாரியம், தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்ட தேர்வு என்பது முறைப்படி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு, சில போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் தூண்டுதலே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து போட்டித் தேர்வு பயிற்சி மையங்களையும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலம் முழுவதும் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும்நிலையில், பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.