பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்
பீகார் மாநிலத்தில் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போஜ்பூர் மாவட்டத்தில் பியான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜமுனா என்ற கிராமத்தில் நேற்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த விமலேஷ் சாவ் என்ற இளைஞர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இளைஞர் மரணத்தை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகள் மீது கற்களை வீசி தாக்கினர்.
அந்த இளைஞர் மரணத்திற்கு அதேப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் தான் காரணம் என்று கூறி அந்த ஊரைச் சேர்ந்த சிலர் அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதனர். கன்னத்தில் பளார், பளார் என அறைந்தும், உடலில் சரமாரியாக தாக்கியும் காயப்படுத்தினர். ’தான் ஒரு அப்பாவி எந்தவொரு தவறும் செய்யவில்லை’ என்று அந்தப் பெண் கதறி அழுது அவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அவர்கள் அதனை கேட்கவில்லை. தாக்குதல் நடத்தியதோடு விடாமல் அந்தப் பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் உட்பட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. வீடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெண் நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டுமென்று லாலு பிரசாத்தின் மகனும், முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி வலியுறுத்தியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை வீடியோவில் பார்த்தி அதிர்ச்சியுற்றதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.