337 மெட்ரிக் டன் கழிவுகள்.. போபால் யூனியன் கார்பைட் ஆலை ரசாயன கழிவுகள் பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை!
போபாலில் யூனியன் கார்பைட் ஆலை ரசாயன கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்க மிக கவனமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்த யூனியன் கார்பைட் ஆலையில் கடந்த 1984 ம் ஆண்டு விஷவாயு கசிந்ததில் பல்லாயிரகணக்கானோர் உயிரிழந்தனர். பல லட்சக்கணக்கானோர் இன்றளவும் உடல் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
அந்த ஆலை தற்பொழுது செயல்படாவிட்டாலும், மிகவும் ஆபத்தான இரசாயன கழிவுகள், 40 ஆண்டுகளாக இன்னும் உள்ளன. இது குறித்து உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் இரசாயண கழிவுகள் பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. போபாலில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இந்தூர் அருகே பீதம்பூருக்கு 12 கண்டெய்னரில் 337 மெட்ரிக் டன் கழிவுகள் 5 காவல்துறை வாகனத்துடன் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டன.
கழிவுகளை அகற்றும் பணியில் பிரத்யேக உடையில் 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு 30 நிமிடம் மட்டுமே சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கழிவுகளை கொண்டு செல்வதற்காக 2 கி.மீ சுற்றளவுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்கள் வெளியே வரவும் தடைசெய்யப்பட்டு இருந்தது. மேலும் மக்கள் அதிகமில்லாத இடங்களில் இவை பொட்டலமாக்கப்பட்டு, பின் எரிக்கப்படும் என்றும் அந்த புகையை மூன்று அடுக்கு வடிகட்டி மூலம் வடிகட்டப்படும் என்றும் அந்த சாம்பலில் நச்சு எதும் இருக்கிறதே என்று சோதிக்கப்பட்டு பின்னர் புதைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த பணிக்கும் 6 மாதங்கள் பிடிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.