பிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்? முழு விவரம்!

பிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்? முழு விவரம்!
பிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்? முழு விவரம்!

பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் யார்? அவர்கள் பின்னணி என்ன என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ள 57 வயதான சுதா பரத்வாஜ், வழக்கறிஞர், தொழிற்சங்கவாதி, மனித உரிமை ஆர்வலர் என பன்முகம் கொண்டவர். சுதா பரத்வாஜ் கணிதமும், சட்டமும் பயின்றவர். கல்லூரி காலத்திலேயே தொழிலாளர் நலன் சார்ந்த அமைப்புகளில் பங்கெடுத்து வந்த இவர், தற்போது வழக்கறிஞராக தொழிலாளர் நலம் , மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை கையாண்டு வருகிறார். சத்தீஸ்கரில் சுரங்கப் பணியாளர்கள் உரிமைகளுக்காக சுமார் 30 ஆண்டுகளாக அங்கேயே தங்கி போராடியவர்.

ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ள வரவர ராவ், பிரபலமான எழுத்தாளர். 78 வயதான இவர் புரட்சிகர எழுத்துகளால் அறியப்படுபவர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையே தூதராக செயல்பட்டவர். புரட்சிகர எழுத்தாளர் என்ற அமைப்பை நிறுவியர். அந்த அமைப்பு - நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக கவிதை , கட்டுரை பிரசுரிக்கும் அமைப்பு. 1974ஆம் ஆண்டு ஆந்திர அரசு இவர் மீது புரட்சியை தூண்டியதாக வழக்கு தொடர்ந்தது. ஆனால் 1989இல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். பலமுறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவ்லகா, பத்திரிகையாளர். பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பயிற்சி பெற்ற இவர், ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். 30 ஆண்டுகளாக கட்டுரையாளராக இருக்கும் இவர் காஷ்மீரில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், சத்தீஸ்கர் குறித்தும் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 65 வயதான இவர், Days and Nights in the Heartland of Rebellion என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

60 வயதான வெர்னான் கோன்சல்வ்ஸ், 2007ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததற்காக பயங்கரவாத தடுப்பு குழுவால் கைது செய்யப்பட்டார். 2014ஆம் ஆண்டு நாக்பூர் நீதிமன்றம் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கியது. தெற்கு மும்பையில் பிறந்த இவர், விதர்பாவில் பணியாளர்கள் உரிமைகளுக்காக போராடி வந்தார். இவர் எழுத்தாளரும் கூட.

மகாராஷ்ட்ராவில் கைதான அருண் பெரேராவின் வயது 48. 2007ஆம் ஆண்டு நாக்பூரில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். தேசத்துரோகம் உள்ளிட்ட 10 வழக்குகள் போடப்பட்டு 4 ஆண்டுகள் தண்டனை பெற்றார். பின்னர் 2014இல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர், தன்னுடைய சிறை வாழ்வை விவரிக்கும் விதமாக Colours of the Cage என்ற புத்தகத்தை எழுத்தியுள்ளார். 2015இல் மும்பை பார் கவுன்சிலில் உரிமம் பெற்று வழக்கறிஞராக உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com