உ.பி தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக களமிறங்கும் சந்திரசேகர் ஆசாத் யார்?

உ.பி தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக களமிறங்கும் சந்திரசேகர் ஆசாத் யார்?
உ.பி தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக களமிறங்கும் சந்திரசேகர் ஆசாத் யார்?

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக தேர்தலில் களமிறங்குகிறார் பட்டியலின இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் என்பவர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம், இங்கே!

தேர்தல்களில் தேசியக் கட்சிகள் - மாநிலக் கட்சிகள் பிரதானப்படுத்தப்பட்டாலும் சில நேரங்களில் சிறிய கட்சிகள் உள்ளூர் அமைப்புகள் ஆகியவையும் அதிக கவனம் பெறும். அப்படி மிகப்பெரிய தேர்தல் களத்திற்கு தயாராகி வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பலராலும் கவனிக்கப்படுகிறது பீம் ஆர்மி அமைப்பு. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய பீமாராவ் அம்பேத்கர் அவர்களது ராணுவம் என்ற பொருள்படும் இந்த அமைப்பை சந்திரசேகர் ஆசாத் என்பவர் உருவாக்கினார்.

அடிப்படையில் வழக்கறிஞரான இவர், ஜாதி எதிர்ப்பு மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். டைம்ஸ் நாளிதழின் வளர்ந்துவரும் தலைவர்களைக் கொண்ட 100 பேர் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பணியிடங்கள் உள்ளிட்ட எந்தப் பகுதியில் பட்டியலின அல்லது சிறுபான்மையினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அடக்குமுறைகளை சந்திக்கும் பொழுது, இவரும் இவரது ஆதரவாளர்களும் களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள். தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இவரும் இவரது அமைப்பினரும் நடத்திய போராட்டம் இவருக்கு பெரும் செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆரம்பத்தில் தேர்தல் சாராத அமைப்பாக செயல்பட்டு வந்த இவர்கள், 2019ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே தற்பொழுது நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வந்த சந்திரசேகர ஆசாத், ஆட்சி கட்டிலில் இருந்து பாரதிய ஜனதா கட்சியை அகற்றுவதற்கு யாருடனும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனையடுத்து களத்தில் மிக வலுவாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உடன் கூட்டணி அமைக்க கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. யாதவர்கள் உள்ளிட்ட ஓபிசி பிரிவினரின் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகள் நிச்சயம் தேவைப்படும் என்பதை உணர்ந்த அகிலேஷ் யாதவ் தனது கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் வேளைகளில் ஆரம்ப கட்டத்தில் இருந்தார்.

அகிலேஷ் யாதவின் கை ஓங்குவதை பார்த்து, அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களும் மாற்றுக் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சமாஜ்வாதி கட்சியில் கடந்த சில வாரங்களில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர் எனவே இவர்களுக்கு அதிக இடங்களை கொடுக்க வேண்டியிருப்பதால் சந்திரசேகர் ஆசாத் கட்சியினருக்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே கொடுக்க அகிலேஷ் யாதவ் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் `இவ்வளவு குறைவான இடங்களை கொடுத்து அகிலேஷ் யாதவ் தங்களை அவமானப்படுத்தி விட்டார் என்றும் இனி 100 சீட்டுகளை கொடுப்பதாக இருந்தாலும் அவருடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை’ என அறிவித்தார் சந்திரசேகர் ஆசாத். 

இதற்கிடையில் முதல்வர் யோகி ஆதித்யநாதிற்கு எதிராக அவர் போட்டியிடும் கோரக்பூர் சட்டமன்ற தேர்தலில் களம் காண போவதாக சந்திரசேகர் ஆசாத் அறிவித்தார். அது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. கோரக்பூர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தோல்வியே தராத கோட்டை. சமாஜ்வாதி கூட்டணியிலிருந்து சந்திரசேகர ஆசாத் கட்சி விலகியபோது, எதிரணியின் பட்டியலின வாக்குகள் சிதறும் என்ற நிம்மதியில் இருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு அவரின் இந்த முடிவு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

முதல்வருக்கு எதிரான பீம் ஆர்மியின் இந்த முடிவு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை தேர்தல் முடிவுகளிலையே தெரிந்து கொள்ள முடியும்.

நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com