90 மணிநேர வேலை | தொடரும் விவாதம்.. எதிர்வினையாற்றிய BharatPe CEO!
இந்தியாவின் தொழிலதிபர்களில் ஒருவரான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி, சமீபகாலமாக 6 நாள் வேலை குறித்த கருத்துகளை முன்வைத்து வருகிறார். அதாவது, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே அவரது வலுவான கோரிக்கையாக உள்ளது.
இவருடைய கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். என்றாலும் அவ்வப்போது, இந்த கருத்து மீண்டும் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இவ்விவாதம் தொடர்பாக Shaadi.com நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுபம் மிட்டலும், Emcure Pharmaceuticals நிறுவனத்தின் சிஇஓ நமீதா தாபரும் மோதிக் கொண்டனர். அனுபம் மிட்டலின் 70 மணி நேர வேலைக்கு, நமீதா தாபர் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கவுதம் அதானி, “நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டைவிட்டு ஓடி விடுவார்” எனத் தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், தனது ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் வேலை வாங்க முடியாததற்காக வருத்தப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, “இவ்வளவு மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் 90 மணி நேர வேலை குறித்த கருத்துகள் இணையத்தில் எதிர்வினையாற்றி வருகிறது. இதுகுறித்து பாரத்பே (BharatPe) தலைமை நிர்வாக அதிகாரி நளின் நேகி, “90 மணிநேரம் வேலை என்பது கடினமானது. என்னைக் கேட்டால் வேலையைப் பொறுத்தவரை அதன் தரமே முக்கியம். பணி - வாழ்க்கைச் சமநிலை பற்றிய விவாதம் எப்போதும் இருந்து வருகிறது. புதிய நிறுவனங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் தொழில் பாதையை வளர்க்க முடியும். அந்த வகையில் ஆறாவது ஆண்டைத் தொடும் பாரத்பே நிறுவனம் ஒரு கலாசாரத்தைக் கட்டமைக்க விரும்புகிறது.
பாரத்பே நிறுவனம், மக்களுக்கு ஒரு தொழில் நிறுவனமாக அறியப்பட வேண்டும். அதில்தான் எங்களுடைய கவனம் உள்ளது. ஆகையால், 90 மணி நேர வேலை பற்றிய கருத்துகளை எங்கள் நிறுவனம் நம்பவில்லை. 90 மணி நேர வேலை சாத்தியமல்ல. பணியிடத்தில் வேலை நேரத்தை அளவிடுவதற்கு பதிலாக, ஊழியர்களின் உற்பத்தித்திறன் மற்றும் முடிவுகளை அளவிடும்போது நல்ல பலன்களை நாம் காணலாம். அதிக உற்பத்தி திறனோடு பணி செய்வோர், தரம் வாய்ந்த முடிவுகளை கொடுப்பார்கள். குறிப்பாக உற்சாகமாய் வேலை செய்யும் ஊழியர்கள் தரம் வாய்ந்த முடிவுகளை அதிகம் கொடுப்பார்கள். அவர்கள் பணியை நாம் பின்தொடர வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மரிகோ லிமிடெட் தலைவர் ஹர்ஷ் மரிவாலா அதிக மணி நேர வேலையைவிட தரத்துக்கு ஆதரவு அளித்திருந்தார். அவர், "உறுதியாக, கடின உழைப்பே வெற்றியின் முதுகெலும்பு. ஆனால் அது எத்தனை மணி நேரம் என்பது பற்றியது அல்ல. அத்தனை மணி நேரத்தில் ஒருவர் எவ்வளவு தரம் மிக்க வேலையை பார்க்கிறார் என்பதையும் அவர் ஆர்வத்தையும் பற்றியது" எனப் பதிவிட்டிருந்தார்.
அதேபோல் ஐடிசி லிமிடெட் தலைவர் சஞ்சீவ் பூரியும், “பணியாளர்கள் தங்கள் திறனை உணர்ந்து, தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்ய அதிகாரம் அளிப்பது, எத்தனை மணிநேரம் அவர் அலுவலகத்தில் செலவிடுகிறார் என்பதைவிட முக்கியமானது” எனப் பதிவிட்டிருந்தார்.
அதேபோல் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், "வேலை செய்வதற்கு எளிதான ஏற்ற இடங்கள் உள்ளன. ஆனால் யாரும் வாரத்தில் 40 மணிநேரத்தில் உலகை மாற்றவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், பாரத்பே தலைமை நிர்வாக அதிகாரி நளின் நேகியின் கருத்தும் வரவேற்பைப் பெற்றுள்ளது.