கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா; நிதிஷ்க்கு செக்? OBC மக்களை குறிவைக்கும் பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
கர்புரி தாகூர், பாரத ரத்னா
கர்புரி தாகூர், பாரத ரத்னாட்விட்டர்

பீகார் மாநில மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா!

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது, பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. அதற்குக் காரணம், இதில் பாஜகவின் அரசியல் ஆதாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.

பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (ஜன.23) அறிவித்தார். கர்பூரி தாக்கூர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

”இந்த அறிவிப்பில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” - பிரதமர் மோடி

இதுகுறித்து பிரதமர் மோடி, "சமூக நீதியின் கலங்கரை விளக்கமான ’ஜன் நாயக்’ கர்பூரி தாக்கூர்ஜிக்கு பாரத ரத்னா விருதை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் அவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்பதில் உறுதியானவராக இருந்த அவரது நீடித்த முயற்சிகளுக்குச் சான்றாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

”அறிவிப்பை வரவேற்கிறேன்; மகிழ்ச்சியை அளிக்கிறது” - நிதிஷ்

கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பதைப் பலரும் வரவேற்றுள்ளன. முக்கியமாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர், ’கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்கியது சரியான முடிவு. அதை வரவேற்கிறேன். இது, தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகப் பிரிவினரிடையே இது நேர்மறையான அதிர்வை உருவாக்கும். கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று, தான் எப்போதும் கோரிவந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

”9 ஆண்டுகளாக எங்கே இருந்தார்கள்?” -ஆர்ஜேடி

அதேநேரத்தில் நிதிஷ்குமார் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதாள தள இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி, "தேர்தல் நெருங்கும்போது அவருக்கு இப்போது பாரத ரத்னா வழங்குகிறார்கள். அவர்கள் 9 ஆண்டுகளாக எங்கே இருந்தார்கள்? நீண்டகாலமாக கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி வரும் லாலு யாதவின் அழுத்தம் காரணமாக இது நடந்தது. இது அரசியல் நாடகம்” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த கர்பூரி தாக்கூர்?

’ஜன் நாயக்’ (மக்களின் தலைவர்) என அழைக்கப்படும் கர்பூரி தாகூர், 1924ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் சமஸ்டிபுரி மாவட்டத்தில் மிகவும் சாதாரண கிராமத்தில் பின்தங்கிய சமூகத்தில் பிறந்தவர். மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட அவர், பின்னாளில் அரசியலில் இணைந்து, முதல்முறையாக 1952இல் ஏம்.எல்.ஏவாகத் தேர்வுசெய்யப்பட்டார். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொடர்ந்து அடுத்தடுத்த முறை அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தவர், ஜனதா கட்சியில் ஐக்கியமாகி 1970 முதல் ஜூன் 1971 வரை மற்றும் டிசம்பர் 1977 முதல் ஏப்ரல் 1979 வரை முதல்வராக, இரண்டுமுறை தேர்வுசெய்யப்பட்டார். அதிலும் இவர், பீகாரின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்பதுதான் கூடுதல் சிறப்பு. கொஞ்சகாலமே இவர் ஆட்சியில் இருந்தாலும், தன் பெயரை மக்கள் மனங்களில் பொறிக்கும்படி செய்தார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை

குறிப்பாக, இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 26 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அடுத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநிலத்தில் மெட்ரிகுலேஷன் கல்வி வரை இலவச கல்வியை அறிவித்த முதல்வராகவும், மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒரே ஊதியக் குழுவை மாநிலத்தில் அமல்படுத்திய முதல் முதல்ராகவும் தனித்து இயங்கியவர் கர்பூரி தாகூர்.

தொடர்ந்து, அவர் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களுக்காக இறுதிவரை பணியாற்றிய அவர், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் போன்றோர்மாதிரியே கர்பூரி தாகூரும் நேர்மையாகவே இருந்து மறைந்தார் என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். தொடர்ந்து அம்மாநிலத்திற்காகவும், பின்ங்கிய மக்களுக்காகவும் பாடுபட்ட கர்பூரி தாகூர் பிப்ரவரி 17, 1988ஆம் ஆண்டு காலமானார். பின்னாளில் இவரை ரோல்மாடலாகக் கொண்டு லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்றோர் அரியணை ஏறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ரத்னா விருதுக்குப் பின் பாஜகவின் அரசியல் ஆதாயம்

கர்புரி தாகூர், இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. குறிப்பாக, இந்த விருது அறிவிப்புக்குப் பின்னால் பாஜகவின் அரசியல் இருப்பதாகவே அரசியலாளர்கள் கருதுகின்றனர். கர்பூரி தாகூர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவராகப் பார்க்கப்படுகிறார். குறைந்த மக்கள்தொகை கொண்ட 100க்கும் மேற்பட்ட சாதிகளின் குழுக்கள், அச்சமூகத்தில் அடங்கியுள்ளன. இதில் வாக்குச் சதவீதத்தை எந்தவொரு சாதியும் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றும் இணைந்து கூட்டாக 29 சதவீத வாக்குவங்கியைக் கொண்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால், 2005ஆம் ஆண்டு நிதிஷ்குமாரை முதல்வராக்கியதில் இந்தப் பிரிவினருக்கு முக்கியப் பங்குள்ளது.

நிதிஷுகுமாருக்கு எதிராக பாஜக வைக்கும் செக்!

இதன் காரணமாக, இந்தப் பிரிவு பீகார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுவதுடன், மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி தேசியக் கட்சிகளும் இதன் வாக்குவங்கியைக் குறிவைத்தே தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பீகாரில் கடந்த ஆண்டு நிதிஷ்குமார் அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 37 சதவிகிதமும், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதமும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன்காரணமாகவே பீகாரின் பிற்படுத்தப்பட்டோரின் தலைவராகப் பார்க்கப்படும் கர்பூரி தாகூருக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருதை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக
பாஜகfile image

இதன்மூலம் அத்தகைய சாதி ஓட்டுகளை பாஜக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை செய்யக்கூடும் எனக் கணிக்கும் அவர்கள், இதை நிதிஷுகுமாருக்கு எதிராக செக் வைப்பதாகவும் நினைக்கிறார்கள். மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மோடி அரசு முக்கியத்துவம் தரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து இப்படியான ஓர் அறிவிப்பு வெளியாகியிருப்பது, அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், இத்தனை வருடங்களாக, அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவிக்காமல் இருந்த மத்திய அரசு, தற்போது அறிவித்திருப்பதும் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நாளை கர்பூரிக்கு பிறந்தநாள் இன்று பாரத் ரத்னா அறிவிப்பு

இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் மேலே கேள்வி எழுப்பியுள்ளதை நாம் முன்னரே பார்த்தோம். முன்னதாக, கர்பூரி தாகூரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாட நிதிஷ்குமார் அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பே மத்திய அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு ஆச்சர்யபடுத்தி அந்தச் சமூக மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. நாளை கர்பூரிக்கு பிறந்தநாள் வரவுள்ள நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மொத்தத்தில், பீகார் அரசியலில் கர்பூரி தாகூரின் செல்வாக்கு அரசியலின் பலமாகப் பார்க்கப்படுகிறது என்பதுதான் நிதர்சமான உண்மை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com