அரசியல் தொடர்பு... தலைவர் நீக்கம்... - பாரதிய கிசான் யூனியனில் சலசலப்பு?!

அரசியல் தொடர்பு... தலைவர் நீக்கம்... - பாரதிய கிசான் யூனியனில் சலசலப்பு?!

அரசியல் தொடர்பு... தலைவர் நீக்கம்... - பாரதிய கிசான் யூனியனில் சலசலப்பு?!
Published on

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களில் முக்கியமானது பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு ஹரியானா). ஹரியானா - டெல்லி மாநில எல்லையில் இவர்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்த சங்கத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு ஹரியானா) தலைவர் குர்னம் சிங் சாதுங்கி, 'ஜெயின் சன்சாத்' எனப்படும் போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் சில அரசியல் தலைவர்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவரை சன்யுக்த் கிசான் மோர்ச்சா குழுவில் இருந்து நீக்கியுள்ளனர் சங்கத்தின் மற்ற நிர்வாகிகள்.

மேலும், குர்னம் சிங் ஏழு பேர் கொண்ட குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெறும் உழவர் சங்கங்களின் முன்மொழியப்பட்ட கூட்டத்தில் பங்கேற்கவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

``குர்னம் சிங் அரசியல் கட்சிகளிடமிருந்து விலகி இருப்பது மற்றும் கட்சிகளை இயக்கத்திலிருந்து ஒதுக்கிவைப்பது பற்றிப் பேசினார். ஆனால் அவரே அரசியல் கட்சிகளைச் சந்தித்தார்" என்று பாரதிய கிசான் யூனியன் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் பஞ்சாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட கூட்டத்தை குர்னம் சிங் ஏற்பாடு செய்திருந்தார். அதில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். 'அனைத்து கட்சி கூட்டத்திலும்' சாதுனி கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் பாரதிய கிசான் யூனியனுக்கு தெரியாமல் நடத்தப்பட்டதாக குற்றம்சுமத்துகிறார்கள் அதன் மற்ற நிர்வாகிகள்.

``சாதுனி அரசியல் கட்சிகளுடன் எடுத்துக்கொண்ட அனைத்து கட்சி கூட்டத்துடன் பாரதிய கிசான் யூனியனுக்கு எந்த தொடர்பும் இல்லை. அரசியல் கட்சிகளுடன் சாதுனி தொடர்ந்து செய்து வரும் நடவடிக்கைகளை கவனித்த பின்னர், நேற்று பாரதிய கிசான் யூனியன் பொதுக் கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடந்தது. பின்னர் இதற்கான ஒரு குழுவை அமைத்து, இந்த விவகாரத்தை விசாரித்து 3 நாட்களில் அதன் அறிக்கை வழங்கப்படும். பின்னர் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கப்படும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போராட்டத்தை உடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று கூறி சாதுனி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த திடீர் மோதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com